Advertisment

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஹர்திக் பாண்டியா முழுமையாக விலகல்; மாற்று வீரர் பெயர் அறிவிப்பு

இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஐ.சி.சி உறுதி செய்துள்ளது.

author-image
WebDesk
Nov 04, 2023 10:28 IST
New Update
Hardik Pandya ruled out of the World Cup due to ankle injury Tamil News

ஹர்திக் பாண்டியா தனது கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

worldcup 2023 | Indian Cricket Team | Hardik Pandya: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் களமாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. 

Advertisment

அடுத்ததாக இந்திய அணி அதன் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியானது  கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அரங்கேறுகிறது. தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி பெங்களூருவில் இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Hardik Pandya ruled out of the World Cup due to ankle injury

ஹர்திக் பாண்டியா விலகல் 

இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஐ.சி.சி நேற்று சனிக்கிழமை உறுதி செய்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்தை காலை வைத்து தடுக்க முயன்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க இங்கிலாந்தில் இருந்து சிறப்பு மருத்துவர் ஒருவரும், தேவையான ஊசிகளும் வரவழைக்கப்பட்டன. 

ஹர்திக் பாண்டியா தனது காயத்திற்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவர் கடந்த 22 ஆம் தேதி தர்மசாலாவில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை தவறிவிட்டார். பின்னர், அவர் லக்னோவில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குனார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் முழுமையாக குணமடையாத நிலையில் அவர் அடுத்த  இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்றும், அவர் கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாட மட்டுமே தகுதியுடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தனது கணுக்கால் காயத்தில் இருந்து மீளாததால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்திற்குப் பிறகு மீண்டும் வந்துள்ள 27 வயதான பிரசித் கிருஷ்ணா, இந்தியாவுக்காக 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக 4 போட்டிகளில் விளையாடி இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்தார். சிக்ஸரை பறக்கவிட்ட அவர் 11 ரன்கள் எடுத்து இருந்தார். 

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா முதுகில் காயம் அடைந்தார். அதிலிருந்து மீண்டும் வந்த பிறகும் அவர் ஆரம்பத்தில் பந்து வீசவில்லை. பின்னர் சில ஓவர்கள் மட்டுமே வீசினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Indian Cricket Team #Hardik Pandya #Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment