Advertisment

ஒரு ஜாம்பவன் வீரருக்கே இந்த நிலைமையா... ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவை அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உதாசீனப்படுத்தியதாக ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
 Hardik Pandya spotted refusing Lasith Malinga hug after Mumbai Indians defeat viral video Tamil News

மலிங்கா தலைமையிலான மும்பை அணி பந்துவீச்சு வரிசை ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சரியாக செயல்படவில்லை விமர்சனம் எழுந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Hardik Pandya | Lasith Malinga | IPL 2024 | Mumbai Indians | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று முன்தினம் புதன்கிழமை ஐதராபாத்தில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

Advertisment

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரன் மழை பொழிந்த ஹென்றிச் கிளாசென் 80 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், ஐடன் மார்க்ரம் 42 ரன்களும் எடுத்து மிரட்டினர்.

இதனைத் தொடர்ந்து, 278 ரன்கள் கொண்ட துரத்திய மும்பை அணியில் ரோகித் சர்மா (26), இஷான் கிசான் (34), நமன் திர் (30), திலக் வர்மா (64) போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதேபோல், கடைசி நேரத்தில் களத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட்  42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால், 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது.

மலிங்காவை தள்ளிவிட்ட ஹர்திக்?

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவை அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உதாசீனப்படுத்தியதாக ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

இலங்கை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முன்னாள் வீரர் லசித் மலிங்கா. தற்போது அவர் ஐ.பி.எல் தொடருக்கான  மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார். 2008ல் ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்ட போது, அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக சேர்ந்த அவர், மும்பை 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவான் வீரராகவும் அவர் பார்க்கப்படுகிறார். 

மலிங்கா தலைமையிலான மும்பை அணி பந்துவீச்சு வரிசை ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சரியாக செயல்படவில்லை விமர்சனம் எழுந்துள்ளது. இந்த சூழலில், அந்தப் போட்டிக்குப் பிறகு, வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மைதானத்திற்குள் மற்ற வீரர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

அப்போது பயிற்சியாளர் மலிங்கா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயன்றுள்ளார். ஆனால், ஹர்திக் பாண்டியா அவரை கையால் தள்ளிவிட்டு அவரைக் கண்டு கொள்ளாமல் சென்றாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் மலிங்கா போன்ற ஒரு ஜாம்பவானை ஹர்திக் பாண்டியா ஏன் இப்படி அவமானப்படுத்தினார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

சர்ச்சை 

இதேபோல், மற்றொரு வீடியோவில், பவுண்டரி எல்லைக்கு அருகே மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் லசித் மலிங்கா அருகருகே அமர்ந்துள்ளனர். அப்போது தண்ணீர் குடிக்க வந்த ஹர்திக் பாண்டியா மலிங்கா முகத்துக்கு நேராக நின்றவாறு பொல்லார்ட்-டிடம் பேசத் தொடங்கினார். 

அப்போது மலிங்கா இறுக்கமான முகத்துடன் இருக்கையில் இருந்து எழுந்து வேகமாக வெளியேறினார். அவர் சென்ற உடன் ஹர்திக் அதே இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி இரண்டு வீடியோக்களில் ஹர்திக் பாண்டியா, மலிங்காவை மதிக்காமல் நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ரோகித் டீம் - ஹர்திக் பாண்டியா டீம் என இரண்டு அணிகளாக பிரித்து கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து மலிங்கா விலக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு புறம் தேர்தல் களம் சூடுபிடிக்க, இது போன்ற உள்ளடி விவகாரங்களால் இப்போது ஐ.பி.எல். தொடர் களத்திலும் அனல் பறக்கிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai Indians Sunrisers Hyderabad Hardik Pandya Lasith Malinga IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment