விமான நிலையத்தில் நடந்தது என்ன? ரூ.5 கோடி வாட்ச் பறிமுதலுக்கு பாண்ட்யா கொடுத்த விளக்கம்…!
Hardik Pandya’s clarification on 2 luxury watches Tamil News: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள வாட்சுகளை மும்பை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Hardik Pandya Tamil News: 7 வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ந்தேதி தொடங்கி இந்த மாதம் 14ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ‘ஷாட் பிட்ச்’ பந்து ஒன்று பாண்டியாவின் தோள்பட்டையில் தாக்கியது. இதனால் அவர் தொடர்ந்து விளையாடுவதில் தடை ஏற்பட்டது.
Advertisment
தற்போது உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் துபாயில் இருந்து பாண்ட்யா நேற்று நாடு திரும்பினார். அவரிடம் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் எதுவுமில்லாத 2 வாட்சுகள் இருந்ததாகவும், ரூ.5 கோடி மதிப்புள்ள அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தரப்பில் அதற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . அந்த அறிக்கையை பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், " நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன். நான் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தயாராக இருந்தேன்.
நான் எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதற்கான மதிப்பீட்டை சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொள்கின்றனர் .அதை நான் செலுத்துவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளேன். எனது கடிகாரத்தின் விலை ரூ. 5 கோடி என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஆனால் தோராயமாக அதன் விலை ரூ. 1.5 கோடியாகும்." என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், ஹர்திக் பாண்டயாவின் மூத்த சகோதரர் க்ருணால் பாண்டயா 4 சொகுசு வாட்ச்களை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தெரிவிக்கமால் கொண்டு வந்ததற்காக மும்பை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அறிவிப்பு நடைமுறை மற்றும் சுங்க வரி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.
க்ருணால் பாண்டயா ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் நிறுத்தப்பட்டார். மேலும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படாத இரண்டு வைரம் பதித்த Audemars Piguet மற்றும் இரண்டு ரோலக்ஸ் மாடல் வாட்சுகள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கைக்கடிகாரங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“