அம்பேத்கர் குறித்து சர்ச்சை ட்விட்: சிக்கலில் மாட்டிக் கொண்ட ஹர்திக் பாண்டியா!

இடஒதுக்கீடு என்னும் நோயை இந்த நாட்டில் பரப்பியவரா? என்று ஹர்திக் பாண்டியா

அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் சர்ச்சையான கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்  ஹர்திக் பாண்டியா மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக வலம் வரும் ஹர்திக் பாண்டியா  தனது ட்விட்டர் பக்கத்தில் பீம் ராவ் அம்பேத்கரை குறித்து கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

இதில், “அம்பேத்கர்  என்பவர்,  சட்டத்தையும், அரசியலையும் வகுத்தவரா… ?அல்லது இடஒதுக்கீடு என்னும் நோயை இந்த நாட்டில் பரப்பியவரா? என்று ஹர்திக் பாண்டியா  குறிப்பிட்டிருந்தார். பாண்டியாவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,   அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா  கருத்து தெரிவிப்பதாக, டி.ஆர் மெக்வால் என்பவர்,  ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பட்டியலின சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், இந்த கருத்து  ஹர்திக் பாண்டியாவின் அதிகார ட்விட்டர் வலைப்பக்கத்தில் தான் பதிவிடப்பட்டிருந்தது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்கிழமை(20.3.18) ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹர்திக் பாண்டியா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம், ஹர்திக் பாண்டியா அம்பேத்கர் குறித்து  பதிவிட்ட ட்விட்டுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சில மணி நேரத்திற்குள் அவர் அந்த பதிவை டெலிட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  அம்பேத்கர் குறித்து  ஹர்திக் பாண்டியா  பதிவிட்டிருந்த கருத்து அவரின்,  அதிகாரப் பூர்வமான ட்விட்டர் பக்கம் இல்லை என்றும், தவறுதலாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
 

×Close
×Close