News about Hardik Pandya - Sanju Samson - Umran Malik in Tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது போட்டி தொடர் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. 20 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா vs நியூசிலாந்து: தொடரை வென்ற இந்தியா…
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நியூசிலாந்தின் நேப்பியரில் நடந்தது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்தது. பின்னர் மழை நின்றுவிட்ட நிலையில், ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியது.
இதன்பிறகு, டாஸ் போடப்பட்டு அதை வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பவுலிங் செய்தது. நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளை துரத்தி 54 ரன்கள் எடுத்தார். கான்வே 59 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 161 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய இஷான் கிஷான் 10 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். சூர்யகுமாருடன் ஜோடி சேர வந்த ஷ்ரேயாஸ் ஐயர் டக்-அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடித்து ஆடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 30 ரன்னுடனும், தீபக் ஹூடா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கீடு செய்த நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் முறைப்படி, இந்திய அணி 9 ஓவர்களுக்குப் பிறகு 75 ரன்கள் சேர்த்து இருந்தது. எனவே, ஆட்டம் மீண்டும் தொடங்கவில்லை என்றால், போட்டி டையில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போட்டி டை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்று அசத்தியுள்ளது. தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றார்.
சஞ்சு, உம்ரான் குறித்த கேள்விக்கு பாண்டியா விளக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் போன்ற எக்ஸ்-ஃபேக்டர் வீரர்கள் ஆடும் லெவனில் களமாடவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடப்பு டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, அணியில் ஒரு அவுட்-ஆன்-அவுட் சீமரை சேர்க்கும் என்றும், அதிக சுதந்திரமான பேட்டர்களை வைத்து விளையாடும் என்பதும் பலரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக்கை பெஞ்ச்சில் அமர வைத்த அணி நிர்வாகத்தின் முடிவு வேறுபட்ட பிம்பத்தை வெளிக்காட்டியது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக்கை ஆடும் லெவனில் தேர்வு செய்யாதது குறித்து கேட்டபோது, இந்தியாவின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா, 'இது என்னுடைய அணி, பயிற்சியாளருடன் பேசிய பிறகு சிறந்த அணியை தேர்வு செய்வேன்' என்று கூறி விளக்கமளித்துள்ளார்.
"வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது எனது அணி, பயிற்சியாளருடன் கலந்துரையாடிய பிறகு சிறந்த அணியை தேர்வு செய்வேன். போதுமான நேரம் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாய்ப்புகளைப் பெறுவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அது நீண்ட காலமாக இருக்கும். இது ஒரு சிறிய தொடர், எங்களிடம் அதிக போட்டிகள் இருந்திருந்தால் அதிக வீரர்களை முயற்சித்திருக்கலாம்.
உதாரணமாக, நான் ஆறு பந்துவீச்சு விருப்பத்தை விரும்பினேன். தீபக் அதை நன்றாக செய்தார். பேட்டர்கள் பந்தில் சிப் செய்யத் தொடங்கினால், எதிரணியை ஆச்சரியப்படுத்த எங்களுக்கு விருப்பங்கள் இருக்கும்." என்று பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. அதற்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.