sports | cricket | india-vs-pakistan: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் ஒதுக்கப்பட்ட லீக் போட்டிகள் முடிந்து விட்டன. லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
சூப்பர் 4 சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி இலங்கையில் நடக்கிறது. இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று மீண்டும் தொடங்கி நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. அதிரடியாக சதம் விளாசிய கோலி 122 ரன்களும், ராகுல் 111 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர், 357 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டும் தோல்வியுற்றது. பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா-வுக்கு காயம் - பாகிஸ்தானுக்கு பேரிடி
/indian-express-tamil/media/post_attachments/hFuEpJUeV9QKuFpfQtxv.jpg)
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர்கள் இருவரும் நாளை மறுநாள் வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான போட்டியை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதிலும் அவர்கள் இருவரும் களமாட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இருவருக்குப் பதிலாக ஷாநவாஸ் தஹானி மற்றும் ஜமான் கான் ஆகிய 2 வீரர்களை பாகிஸ்தான் தயார் செய்துள்ளது. இருப்பினும், ரவுப் மற்றும் நசீம் போட்டியில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“