scorecardresearch

பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஹர்மன்ப்ரீத் விளாசிய ராஜாங்க சதம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்

Harmanpreet Kaur century
Harmanpreet Kaur century

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்  சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று(நவ.9) தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில், ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியவும், நியூசிலாந்தும் நேற்று மோதின. கயானாவின் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியாவின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா 9 ரன்னிலும், ‘சூப்பர்ஸ்டார்’ மந்தனா 2 ரன்னிலும் சொதப்பினர். மந்தனாவின் ஆட்டத்தை காண தவம் கிடந்தோருக்கு நேற்று பெரிய ஏமாற்றம். அடுத்து வந்த தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா 15 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் ரோட்ரிக்ஸும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடக்கத்தில் அமைதி காத்த ஹர்மன்ப்ரீத், அதன்பின் அதிரடியான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

முதல் 13 பந்தில் 5 ரன்

அடுத்த 20 பந்தில் 45 ரன்

என்று விளாசத் தொடங்கினார்.

அவருக்கு, ரோட்ரிக்ஸ் பக்க பலமாக இருந்தார். இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.  ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 59 ரன்களில் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால், மறுமுனையில் துவம்சம் செய்துக் கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் அடித்த 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். 51 பந்தில் 103 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத், கடைசி ஓவரில் கேட்ச் ஆனார். இதில், 7 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கடைசி 7 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் குவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 20 ஓவர் உலகக் கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும். இதற்கு முன்பு அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.

இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. நேற்று அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய சென்னையைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா, 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வீராங்கனையாக சிறப்பாக ஆடி சதமடித்து, கேப்டனாக அணியை வெற்றிப் பெற வைத்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Harmanpreet kaur century in t20 world cup vs nz