ஐசிசி மகளிர் உலக டி20 தொடரில், ஆன்டிகுவாவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 19.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிக்ஸ் 26 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 16 ரன்களும் எடுத்தனர். எளிய இலக்கை நோக்கி சேசிங் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தி நிலையில், முக்கியமான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடியவருமான மிதாலி ராஜை நீக்கியது மிகப் பெரிய தவறு என்றும், இதன் காரணமாக இந்திய அணி குறைந்த ரன்கள் சேர்ந்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "நாங்கள் எடுத்த முடிவு அணிக்காக எடுத்த முடிவு. சில நேரங்களில் இது வெற்றியை தரலாம். சில நேரம் இது தோல்வியை தரலாம். ஆனால் இந்த முடிவுக்காக நாங்க வருத்தப்படவில்லை.
எனது அணி விளையாடியதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் சிறப்பாக விளையாடினோம். அதனால், அந்த பிளேயிங் லெவனை மாற்ற வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அதே அணியை தேர்வு செய்தோம்.
நாங்கள் 140 - 150 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். ஆனால் தோல்வியும் விளையாட்டில் ஒரு அங்கம்தான். நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணி. இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மிதாலியின் மேனேஜர் அனிஷா, ஹர்மன்ப்ரீத் கவுரை விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டில் ''ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு பொய் சொல்பவர், அனுபவமற்றவர், கேப்டனாக இருக்கவே தகுதியற்றவர்'' என்று விமர்சித்துள்ளார். மேலும் "பிசிசிஐ அரசியலை நம்புகிறது விளையாட்டை அல்ல" என்றும் கூறியுள்ளார்.
பின்னர், கொஞ்ச நேரத்தில் அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது. இருப்பினும், 'நான் தான் அந்த ட்வீட் செய்தேன்' என அனிஷா ஒப்புக்கொண்டார். "யார் சிறப்பாக ஆடினார், இல்லை என்பது போட்டிகளை பார்த்தால் தெரியும்" என்று க்ரிக் இன்ஃபோ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய மகளிர் அணியின் கேப்டனுக்கு கேப்டனாக இருக்கவே தகுதியில்லை என்று சக வீராங்கனையின் மேனேஜர் தெரிவித்திருப்பது பெண்கள் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.