Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் இருந்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர், இதுவரை 489 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான பல சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.
நாதன் லயன் புகழாரம்
அஸ்வின் தனது கிரிக்கெட் புத்திசாலித்தனத்திற்காக வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களால் பரவலாகப் பாராட்டப்படுகிறார். அவ்வகையில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன் அஸ்வினை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/42cca903f47a7ae97ad221d636815441a98934ef9b0b44dadd65bf37894c3022.jpg?w=640)
இது தொடர்பாக கிரிக்கெட்.காம்.ஏ.யு செய்தியில் நாதன் லயன், "அஸ்வின் உலகத் தரம் வாய்ந்தவர். எனது கிரிக்கெட் வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே அவரை நான் கவனித்து வருகிறேன். அவர் மீது மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறேன். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் " என்று கூறியுள்ளார்.
ஹர்ஷா போக்லே சாடல்
இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர்களில் மிகவும் புகழ்பெற்றவராக திகழ்ந்து வரும் இந்தியாவின் ஹர்ஷா போக்லே தனது சமீபத்திய எக்ஸ் வலைதள பதிவில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
"நாதன் லியான் பேசுகையில், அஸ்வின் ஒருவகையில், அவரது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் என்றும், அவர் மீது மிகுந்த மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். இந்தியாவை விட உலகின் பிற நாடுகள் அஸ்வினை மிக அதிகமாக மதிப்பிடுவதாக நான் அடிக்கடி நினைக்கிறேன்." என்று அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/af1230a9ffe21421be7ec2c81d0e8dbc89735730e5364d75a5162a3fc871cef8.jpg)
பல ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர்பாக வெளிப்படையாக பேசக்கூடியவராக அறியப்படும் ஹர்ஷா போக்லே கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்தது குறித்த அவரது கருத்துகள் அப்போதைய கேப்டன் தோனியை எரிச்சலடையச் செய்தது. இதன்பின்னர், ஹர்ஷா போக்லேவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமற்ற முறையில் தடை செய்தது.
அஸ்வினுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்களின் பலவீனம் இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் தெரியும். ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 லீக் சுற்றில் அந்த அணிக்கு எதிராக 10 ஓவர்களில் 34 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார் அஸ்வின். சென்னையில் நடந்த இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், அடுத்த 10 ஆட்டங்களுக்கு அஸ்வினை பெஞ்சில் அமர வைத்தது அணி நிர்வாகம்.
அஸ்வினை விட குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணி நிர்வாகத்தால் விரும்பப்பட்டனர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் அபாரமாக இருந்தாலும் நிர்வாகம் அவரைச் சேர்த்துக் கொள்ளவில்லை.
இதேபோல், அஸ்வின் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவன் அணிக்குள் இடம் பெற தவறிவிட்டார், ஜடேஜா அவரை விட முன்னிலையில் இருக்கிறார். இந்திய அணி முக்கியமான போட்டிகளில் தோல்வியடைந்தாலும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நெருங்கிய சுழற்பந்து வீச்சாளர் மீது நம்பிக்கை காட்டவில்லை.
அஸ்வினை விட ஜடேஜா ஒரு சிறந்த பீல்டர் மற்றும் பேட்டிங் என்று நிர்வாகம் நினைக்கிறது. அஸ்வின் தனது பேட்டிங் மூலமும் பங்களிக்க முடியும். உண்மை என்னவென்றால், அஸ்வின் அணி நிர்வாகத்தால் தொடர்ந்து வித்தியாசமாக நடத்தப்படுகிறார். இதன் விளைவு தான் இந்தியாவுக்கு அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“