Harsha Bhogle - MS Dhoni Tamil News: மகேந்திர சிங் தோனி உலகில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து ஆட்டத்தை மாற்றியமைப்பதற்காக அறியப்படும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அவர் தனது சொந்த விதிமுறைகளில் வாழ்க்கையை வாழ விரும்புகிறார். கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, கேப்டன் கூல் எப்போதுமே முடிவெடுக்கும் போது அவர் தனது மனதை பின்பற்றுவார்.
இந்நிலையில், பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே முன்னாள் இந்திய கேப்டன் தோனி பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை பகிர்ந்துள்ளார். அவர் தோனி எப்படி மொபைல் போன் பயன்படுத்துவதில்லை என்பதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தோனியைப் பற்றிப் பேசிய போக்லே, “தோனி வேறொரு கிரகத்தைச் சேர்ந்தவர். தோனியின் அறை பூட்டப்பட்டே இருக்காது. அவருடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும். அணியில் உள்ள யார் வேண்டுமானாலும் அவரது அறைக்குள் செல்லலாம். எப்போதும் ரூம் சர்வீஸ் ஆர்டர் செய்யப்படும், அங்கே ஏதாவது இருக்கும். அறை ஒருபோதும் பூட்டப்படுவதில்லை.
ஆனால், நீங்கள் அவரை தொலைபேசியில் அழைக்கவே முடியாது. நான் தோனியை ஒருமுறை மட்டுமே விருந்தில் சந்தித்துள்ளேன். இத்தனை வருடங்களில் அவரை ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன். ஏனென்றால் அவருடன் தொடர்பு கொள்ள முடியாது. அவர் மொபைல் போன் எடுத்துச் செல்வதில்லை. அவரிடம் ஒரு மொபைல் போன் உள்ளது. மிக நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே அந்த எண் தெரியும். டிராவிட் ஓய்வு பெற்றபோது, தோனியிடம் அதைச் சொல்ல அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை." என்று கூறினார்.
முன்னதாக, ரவி சாஸ்திரி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரும் எம்எஸ் தோனி எப்படி மொபைல் போன் பயன்படுத்தவில்லை என்பதை வெளிப்படுத்தி இருந்தனர். “உண்மையாக, இன்று வரை அவருடைய எண் என்னிடம் இல்லை. நான் அதைக் கேட்டதில்லை. அவரிடம் போன் இல்லை என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், எப்படி செய்வது என்று உங்களுக்குத் தெரியும். அவர் அப்படிப்பட்டவர் என்று நான் சொல்கிறேன்” என்று ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய எம்.எஸ்.தோனி, “எனக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே பெரிய பிளவு உள்ளது. நான் ஃபோன்களை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை, போனை எடுக்காத கதைகள் ஏராளம். ஆனால் நான் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறேன். சில வீடியோக்களை என்னிடம் காட்டும்போது, நான் அதை சரியாக இயக்குகிறேனா என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.