ஹரியானா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.
இந்தச் சூழலில், ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாக இருந்தது. முக்கிய நிர்வாகிகள் வினேஷ் போகத்தை டெல்லி விமான நிலையம் சென்று வரவேற்றனர். இதனையடுத்து, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது. ஜூலானா தொகுதி மக்கள் அவரை தற்போது தங்களது எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“