11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று சனிக்கிழமை (அக்.28) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் அரங்கேறும் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி கே.சி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், 41 - 34 என்கிற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. ஹரியானா அணியில் அதிகபட்சமாக அஷுமாலிக் 13 புள்ளிகளையும், வினய் வீரேந்தர் 8 புள்ளிகளையும் பெற்றனர்.
இந்தப் போட்டியுடன் 3 போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் இருக்கிறது. அதேநேரத்தில், தோல்வியுற்ற தபாங் டெல்லி இப்போட்டியுடன் 4 போட்டிகளில் ஆடி, 2ல் தோல்வி, 2ல் வெற்றி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“