/indian-express-tamil/media/media_files/2025/09/20/haryana-steelers-vs-tamil-thalaivas-pkl-season-12-match-44-updates-in-tamil-2025-09-20-19-08-03.jpg)
ப்ரோ கபடி லீக்: கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி!
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 43 - 29 புள்ளிகள் கண்ணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்றிரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 44-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஹரியானா அணி முன்னிலை பெற்றது. முதல் 10 நிமிடங்களிலேயே 15-4 என முன்னிலை பெற்றனர். வினய் மற்றும் ஷிவம் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஹரியானா அணிக்கு பலம் சேர்த்தது.
முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 25-16 என வலுவான நிலையில் இருந்தது. வினய் மற்றும் ஷிவம் இருவரும் தலா 5 புள்ளிகளை எடுத்திருந்தனர். 2-ம் பாதியிலும் ஹரியானா அணி தங்களின் முன்னிலையை தக்கவைத்துக்கொண்டது. ஆட்டத்தின் இறுதி சில நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை எடுத்து நெருங்கி வந்தாலும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
இறுதியாக, ஹரியானா அணி 38-36 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற்றது. ஹரியானா அணியின் ஷிவம் 9 புள்ளிகளும், வினய் 7 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன்கள் தங்களின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
நடப்பு சாம்பியனான ஹரியானா அணி, தமிழ் தலைவாஸ் அணியை 38-36 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டம் பரபரப்பாக இருந்தாலும், ஹரியானா அணி தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வெற்றியை வசப்படுத்தியது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை 14 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 9 போட்டிகளிலும், தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடித்தனர். சுவாரசியமாக, அந்த மூன்றும் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 3 போட்டிகள் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.