ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்-னு ஒரு டி20 தொடர் நடந்துக்கிட்டு இருக்குன்னு கித்னா பேருக்கு தெரியும்? அந்த தொடரில் தான் ஒரு ஆப்கன் வீரர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
அப்போல்லாம் ரவி சாஸ்திரி பேட் எடுத்துக்கிட்டு கிரவுண்டுக்கு வந்தாலே, டிவி-ல மேட்ச் பார்க்குற ஆடியன்ஸ் தண்ணி குடிக்கவோ, சாப்பிடவோ எந்திரிச்சு போயிடுவாங்களாம். ஆனா, அப்படிப்பட்ட ரவி சாஸ்திரி தான் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றார்.
அதற்கு பிறகு, 90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத முதல் உலகக் கோப்பை டி20 தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான மேட்சில் ஸ்டுவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில், யுவராஜ் சிங்கம் ஆறு சிக்ஸர் அடித்ததெல்லாம் வேற லெவல்!! அதே ரவிசாஸ்திரி தான் அன்றைய மேட்சில் யுவராஜ் அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் வேரியேஷன் தெறிக்க வர்ணனை செய்தார்.
இப்போது அதே போன்று, ஆப்கன் வீரர் ஒருவர், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில், ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் விளாசி இருக்கிறார். அதுதான் இப்போ மேட்டர்.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கா? இப்படி ஒன்னு நடந்துக்கிட்டு இருக்கான்னு கேட்காதீங்க.. இந்த வருஷம் தான் முதல் முதலா ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடந்துக்கிட்டு இருக்கு.
மொத்தம் 5 டீம். 23 மேட்ச். இந்தியா அங்க விளையாண்டப்பவே காத்து வாங்குச்சு.. இப்பவும் காத்து தான் வாங்குது. ஆனால், வார இறுதியில் நல்ல கூட்டம் வருகிறது.
கடந்த 5ம் தேதி ஆரம்பிச்ச இந்த சீரிஸ்-ல நேத்து ரஷித் கான் தலைமையிலான காபுல் சவனன் டீமும், முகமது நபி தலைமையிலான பல்க் லெஜண்ட்ஸ் டீமும் மோதின.
இதில், முதலில் பேட் செய்த பல்க் லெஜண்ட்ஸ், 20 ஓவரில் 244 ரன்கள் விளாசியது. நம்ம 'Predator' கிரிஸ் கெயில் 48 பந்தில் 80 ரன்கள் அடித்தார். இதில் 10 சிக்ஸரும், 2 பவுண்டரியும் அடங்கும்.
தொடர்ந்து பேட்டிங் செய்த காபுல் அணியில், தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சசாய் என்பவர் 17 பந்தில் 62 ரன்கள் விளாசினார். இதில், அப்துல்லா வீசிய 3வது ஓவரில், ஒரு வைட் 6 சிக்ஸர் என 37 ரன்கள் விளாசினார் சசாய். ஆப்கன் வீரர் ஒருவர், ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.
இதன் மூலம் கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், கிப்ஸ் ஆகிய வீரர்கள் அடங்கிய எலைட் லிஸ்டில் ஹஸ்ரதுல்லா சசாயும் இணைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த மேட்சில் 12 பந்தில் அவர் அரைசதம் அடித்தார். இதன்மூலம், அதிவேக அரைசதத்தில் யுவராஜ் மற்றும் கெய்லுடன் சசாய் இணைந்துள்ளார். தங்கத்துக்கு 20 வயசு தான் என்பது கூடுதல் தகவல்.
ஆனா, இந்த காட்டடி அனைத்தும் கெய்ல் கண்முன்னே நிகழ்த்தப்பட்டது என்பது தான் ஹைலைட்!