கடந்த ஜூன் மாதம் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடரில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாம் இடம் பிடித்தது. இதற்காக, அத்தொடரில் விளையாடிய ஒவ்வொரு இந்திய வீரருக்கும் ரூ.38.67 லட்சம் பரிசுத் தொகையை பிசிசிஐ வழங்கியுள்ளது.
அதேபோல், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஊதியமாக ரூ.2.02 கோடியும், பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பாரத் அருணுக்கு 26.99 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு அக்டோபர் 18, 2017 முதல் ஜனவரி 17, 2018 வரையிலான மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் மற்றும் பரிசுத் தொகைகளை தவிர்த்து, மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன், விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன், பரோடா கிரிக்கெட் அசோசியேஷன், ஓடிஸா மற்றும் ஆந்திரா கிரிக்கெட் அசோசியேஷன் ஆகியவற்றிற்கும் பிசிசிஐ நிதி அளிக்கிறது.
முன்னாள் தமிழக வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜிக்கும் ஒருமுறை வாழ்நாள் ஊதியமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.19.44 கோடியை இந்தாண்டு சீசனின் வருமான பகிர்வுத் தொகையாக பிசிசிஐ வழங்கியுள்ளது.