இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சில் 103 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை இந்திய அணிக்கு தந்திருந்தது. நிதானமாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா அவருக்கு பந்து வீசிய ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அமைதியாக நின்று கொண்டிருந்த சுப்மன் கில் சாதுரியமாக ஆட்டத்தை மெல்ல நகர்த்தினார்.
சில வீரர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது இந்த வீரர் சிறப்பாக ஆடுவார் எனக் கூறிவிடலாம். நம்முடைய நடையில் 'இந்த பையன் கிட்ட சரக்கு இருக்குப்பா' என்போம். அப்படித்தான் இந்த வீரர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் தான் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில். தன்னுடைய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்களை திணறடித்துள்ளார். ஒவ்வொரு பந்துகளை சந்திக்கும் போதும் நிதானமாக பந்தின் சூழலுக்கு ஏற்ப பேட்டை சுழற்றி பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டியுள்ளார். முதல் இன்னிங்சில் அரை சதம் மட்டும் எடுத்திருந்தாலும் அவரின் விளையாடும் பாங்கு கிரிக்கெட் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் விமர்சனம் செய்வோரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
குறுகிய கை (ஷார்ட் - ஆர்ம்) உடையவராக இருந்தாலும், அவர் பந்துகளை கட் செய்து ஆடும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. சுப்மன் கில் ஆடும் விதம் டெண்டுல்கரின் ஆன்-தி-அப் பஞ்ச் போன்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு ஜாகீர் அப்பாஸின் செக்-டிரைவ்கள் போன்றும் டேமியன் மார்டினின் கவர் டிரைவ் போன்றும் உள்ளது என விமர்சனம் செய்யும் அளவுக்கு நுணுக்கமாக விளையாடுகிறார். பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை அப்பர் - கட் செய்த விதம் அனைவரையும் பிரம்மிக்கச் செய்தது. இது போல அப்பர் - கட் செய்து ஆடும் விதத்தை தன்னுடைய ஊரில் விளையாடும் போது கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். ஊரில் விளையாடும் போது அவரை அவுட் செய்வதற்கு எல்லோரும் திணறுவார்களாம். அப்போது அவர்கள் கோபப்பட்டு பவுன்சர் பந்துகளாக வீசுவார்களாம், அதை சமாளிக்கவே இது போன்ற யுத்தியை பயன்படுத்தியுள்ளார். அது அவருக்கு சர்வதேச அளவில் விளையாடும் போட்டிகளில் கை கொடுத்துள்ளது.
'சில ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி, ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா போன்றோர் தங்களின் இளம் வயதில் எப்படி விளையாடி உள்ளார்கள் என்பதை இணையத்தில் தேடித் தேடி பார்ப்பேன்' என புன்னகை நிறைந்த முகத்துடன் பகிர்கிறார். "நான் சதம் அடிக்க தவறும் போது என்னுடைய தங்கை என்னை கேலி செய்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் எங்கு பின்னடைவை சந்த்தித்தேன் என்று கூற முடியவில்லை. ஆனால் இப்போது அதை சமாளிக்கும் பக்குவம் எனக்கு வந்துள்ளது" என்று அதே புன்னகை நிரம்பிய முகத்தோடு கூறுகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர் அணியில் சுப்மன் கில் விளையாடினார். சுப்மன் கில்லின் நண்பரும் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் அவரை பற்றி கூறும்போது," மனதளவில் மிகவும் உறுதியான மற்றும் திறமையான வீரர். அவர் இவ்வளவு திறமையாக விளையாட காரணம், அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த விளையாட்டு அவர் பெற்றுள்ள அனுபவத்தை விட பெரியது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்" என்கிறார்
சுப்மன் கில்லுக்கு ஐந்து வயது இருக்கும் போது அவரது தந்தை கில்லின் விக்கெட்டை எடுப்பவருக்கு 100 ரூபாய் இலவசம் என அறிவிப்பாராம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பந்துகளை பவுன்டரிக்கு பறக்க விடுவாராம். அந்த அனுபவமே இப்போது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை பவுன்டரி எல்லைகளுக்கு துரத்த உதவியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.