/indian-express-tamil/media/media_files/2025/06/19/hockey-india-and-tn-government-sign-mou-unveil-official-logo-of-fih-mens-junior-world-cup-2025-tamil-news-2025-06-19-17-54-43.jpg)
ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு இன்று தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்டது. இந்த நிகழ்வின்போது தொடருக்கான அதிகாரபூர்வ லோகோவும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில், "கோயம்புத்தூரில் இருக்கின்ற ஹாக்கி ஸ்டேடியம் சர்வதேச தரத்தில் தான் இருக்கிறது. சென்னையில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டேடியம் இருப்பதினால் சென்னையில் நடத்த முடிவு செய்தோம். சென்னையில் மட்டும் இருக்கக்கூடாது தென் தமிழகத்திலும் இதை நடத்த வேண்டும் என்பதற்காக, இதை நடத்தும் போது உள்கட்டமைப்பு மேம்பாடு பண்ண வேண்டும் என்பதற்காக மதுரையிலும் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம். தென் தமிழகத்திலிருந்து நிறைய ஹாக்கி வீரர்கள் வருகிறார்கள். அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக தென்னகத்தில் நடத்துகின்றோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி,இ.ஆ.ப., பீகார் மாநில விளையாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் திரு.ரவீந்தரன் சங்கரன், இ.கா.ப., ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் திரு.போலா நாத் சிங், பொருளாளர் திரு.சேகர் ஜெ.மனோகரன், இயக்குநர் (பொது) கமாண்டர் திரு.ஆர்.கே.ஸ்ரீவத்சவா உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இந்த டிசம்பரில் சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரை நடத்த தமிழ்நாடு தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மொத்தம் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து நான் ஏற்கனவே விளக்கினேன்.
முறையான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லோகோ வெளியிடப்பட்டது. இந்த மதிப்புமிக்க போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசும் ஆக்கி இந்தியாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 24 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தொடர்ச்சியான ஆதரவு தரும் எங்களது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை 2025 தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.