‘என்னது… இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லையா?’

தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லையா? இல்லை.. இல்லவே இல்லை.. இவ்வளவு ஏன்! இந்தியாவுக்கு என்று தேசிய விளையாட்டே கிடையாது.

Hockey, Not our National Game?
Hockey, Not our National Game?

ஆசைத்தம்பி

‘என்னது… இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லையா?’… இதைத் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேள்வியாக எழுப்பியுள்ளார்.

நாம் படிக்கும் காலத்தில், நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? என்று சட்டென கேட்டால் பட்டென சொல்வோம் ஹாக்கி என்று… ஏன், இப்போது வரைக்கும் கூட பெரும்பாலானோர் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போ? நமது தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லையா? இல்லை.. இல்லவே இல்லை.. இவ்வளவு ஏன்! இந்தியாவுக்கு என்று தேசிய விளையாட்டே கிடையாது. இதுதான் உண்மை!.

இந்நிலையில், `தேசிய விளையாட்டு ஹாக்கி’ என அறிவிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் கடிதத்தில், “அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறியப்படும் ஹாக்கி விளையாட்டு, தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

நீங்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகும் தகுதி உள்ளது. இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும். மேலும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும். ஆகவே, தேசிய விளையாட்டு ஹாக்கி என அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா முதல்வரே இவ்வளவு நாள் ஹாக்கி தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என நினைத்திருக்கிறார் என்றால், அந்தளவிற்கு, அது உண்மை என்பது நம் மனதில் காலங்காலமாக பதியவைக்கப்பட்டு வருகிறது.

எப்படி நாம் இதனை நம்பினோம்?

இன்று வேண்டுமானால், கிரிக்கெட் அனைவரும் விரும்பும் விளையாட்டாக இருக்கலாம். ஆனால், சுதந்திரத்திற்கு முந்தைய வரலாற்றில், ஹாக்கி போட்டியில் யாரும் அசைக்க முடியாத அணியாக விளங்கியது இந்திய அணி. ஒலிம்பிக் தொடரில் எட்டு முறை இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. 1928 முதல் 1956 வரை தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தை குவித்து தனிக்காட்டு ராஜாவாக விளங்கியது இந்திய அணி.

இதனால், அப்போது இந்திய மக்கள் ஹாக்கி தான் தங்களது தேசிய அணி என்று நம்பினர். ஹாக்கி என்றாலே இந்தியா தான் என்ற கர்வம் மக்களுக்குள் இருந்தது. மற்ற ஹாக்கி அணிகள் இந்தியாவின் அருகில் கூட வர முடியாத சூழல் நிலவியது. இதனாலேயே, அப்போதில் இருந்தே, ஹாக்கி தான் இந்திய விளையாட்டு என்றும், இந்தியாவின் தேசிய விளையாட்டு என்றும் போதிக்கப்பட்டு வருகிறது. நமது பள்ளிக் காலத்தில் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கூட, ஹாக்கி தான் நமது தேசிய விளையாட்டு என சொல்லிக் கொடுத்திருகின்றனர். ஏனெனில், அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் அப்படித் தான் போதித்து இருந்தார்கள். இப்படித் தான் காலங்காலமாக ஒரு தவறான செய்தி, உண்மையென நம்பப்பட்டு, போதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால், தற்போதைய இந்திய ஹாக்கி அணியின் நிலைமை அதற்கு நேர்மாறாக அதளபாதாளத்தில் உள்ளது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போன இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியில் தோற்று வெளியேறியது.

இந்திய ஹாக்கி அணியின் கோச்சாக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மகளிர் அணியின் கோச்சாக இருந்த நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே ஆடவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டார். அப்போது மகளிர் அணியின் கோச்சாக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் அணி சரியாக செயல்படவில்லை என்று, மரிஜ்னே மீண்டும் மகளிர் அணிக்கு கோச்சாக இந்த மாதம் மாற்றப்பட்டார். மகளிர் அணியின் கோச்சாக இருந்த ஹரேந்திர சிங், ஆடவர் அணியின் கோச்சாகி உள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக வந்துள்ளார்.

இப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது தற்போதைய ஹாக்கி அணி.

2012ம் ஆண்டு RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தான், இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி கிடையாது என்ற பதில் கிடைத்தது. அப்போது தான், ‘தேசிய விளையாட்டு ஹாக்கி’ என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற உண்மை தெரிய வந்தது.

எனவே தான், ‘தேசிய விளையாட்டு ஹாக்கி என அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்’ என ஒடிசா முதல்வர், பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அப்படியே நாமும் நமது வேண்டுகோளை முன் வைப்போம்.

 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hockey not our national game

Next Story
ஐபிஎல்-2017: அதிரடி காட்டிய ரெய்னா… குஜராத் அணிக்கு 2-வது வெற்றி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com