Hockey World Cup: “என் கடைசி மூச்சு வரை, என்னுள் உயிர் இருக்கும் வரை, நான் இதைத் தொடர்வேன். இந்த வேலையைச் செய்யும் போதே நான் இறந்துவிடுவேன்.” என்கிறார் கோல் போஸ்ட்டின் பின்பலகையில் அமர்ந்து, வியர்வையில் நனைந்திருக்கும் பயிற்சியாளர் டொமினிக் டோப்போ.
71 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, தனது பேரக்குழந்தைகள் வயது இருக்கும் இளம் வீரர்களுடன் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக குவாட்டர் -கோர்ட் ஹாக்கி விளையாடிய பிறகு சோர்வுடன் இருக்கிறார். அந்த வீரர்களை பட்டை தீட்ட வேண்டுமென்பதற்காக தனது வயதை பொருட்படுத்தமால், அவர்களுடன் விளையாடி நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கிறார்
கடந்த 22 ஆண்டுகளாக, விடியற்காலையில் இருந்து சாயங்காலம் வரை, அதாவது அவர் சூரியனுக்கு முன் உதயமாகி, காலை 6.30 மணிக்கு ஹாக்கி மைதானத்தை அடைந்து, மாலை 5.30 மணிக்கு புறப்படுகிறார். “இந்த விளையாட்டு மற்றும் இந்த வீரர்கள் மட்டுமே என்னிடம் உள்ளது. எனக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.” என்று அவர் கூறுகிறார்.
அதை அவர் மிகைப்படுத்தவில்லை. அந்த இளம் வீரர்களுக்காக டோப்போ தனது சுமூகமான குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்தார், சில சமயங்களில் ஒரு நாளைக்கு 40-50 கிமீ சைக்கிள் ஓட்டி வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தார். தனது சிறு வணிகத்தை விற்றார், தனது மூதாதையர் நிலத்தை அடமானம் வைத்தார். இதன் மூலம் தான் எதற்கு பிறந்தாரோ அதை தொடர்ந்து செய்ய முடிந்தது. அது தான் இளம் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஹாக்கி விளையாட்டை கற்றுக்கொடுப்பது.
கடந்த 20 ஆண்டுகளில், ரூர்கேலா மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு வெளியே விளையாடாத அந்த ஹாக்கி பயிற்சியாளர் 100 மாநில அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளார். அவர்களில், 13 பேர் ஜூனியர் மற்றும் மூத்த தேசிய அணிகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இதில் சமீபத்தில் ஓய்வு பெற்ற மிட்பீல்டர் லிலிமா மின்ஸ் மற்றும் கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடிய ஜிவான் கிஷோரி டோப்போ போன்றவர்களும் அடங்குவர்.
தனது முழு வாழ்க்கையையும் அவர்களுக்காக உழைத்து, இளம் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து, அவர்களை இந்திய வீரர்களாக மாற்றும் அடிமட்ட பயிற்சியாளர்களில் டோப்போவும் ஒருவர்.

ஹாக்கி இந்தியா தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான திலிப் டிர்கி கூறுகையில், “டோமினிக் போன்ற பயிற்சியாளர்கள் விளையாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் அவசியம். ஒரு சிறு குழந்தை முதல் முறையாக ஹாக்கி மட்டையை எடுக்கும்போது, அவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கி அவர்களை வலுவான வீரர்களாக மாற்றுவது அடிமட்ட பயிற்சியாளர்களின் பொறுப்பாகும். அவரது மட்டத்தில், டொமினிக் விளையாட்டுக்கு நம்பமுடியாத சேவையை செய்துள்ளார். அவர் குறைந்தது 13 இந்திய சர்வதேச வீரர்களை உருவாக்கியுள்ளார்.” என்றார்.
டோப்போவின் ஹாக்கி தொழிற்சாலை நவீன கால பயிற்சிக்கூடங்களின் அனைத்திலிருந்தும் விலகிய ஒரு வித்தியாசமான உலகம். அந்த உலகத்தை அடைய பிரமாண்டமான புதிய பிர்சா முண்டா ஸ்டேடியத்தைக் கடந்து ரூர்கேலாவிலிருந்து வெளியேறி, வேத வியாசர் மகாபாரதத்தை எழுதியதாக நம்பப்படும் குகைகளைக் கடந்து, சுமூகமான பிஜு விரைவுச் சாலையில் பிராமினி வழியாக சுமார் 40 கி.மீ தூரம் பயணித்து, ஒடிசாவின் பின்புறத்தில் இருக்கும் குகுடா என்ற கிராமத்தை அடைய வேண்டும்.
“என் தந்தை ஹாக்கி விளையாடுவார். அதனால் நான் சிறுவயதில் அவருடன் மைதானத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்” என்று டோப்போ கூறுகிறார்.
இது ஒரு வாழ்நாள் ஆவேசத்தின் தொடக்கமாக இருந்தது. விரைவில், மூங்கிலில் செதுக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தி விளையாடத் தொடங்கினார். “நான் மிகவும் நன்றாக இருந்தேன், நான் ஒரு போஸ்டிலிருந்து இன்னொரு இடத்திற்கு தனியாக பந்தைக் கொண்டு ஓடினேன், அனைத்து டிஃபென்டர்களையும் தோற்கடித்தேன்,” என்று அவர் கூறுகிறார். ஆனால் அவரை வழிநடத்த யாரும் இல்லாததால், பெரிய ஹாக்கி போட்டிகளில் விளையாடும் டோப்போவின் கனவு அப்படியே இருந்தது
“அதனால், நான் நினைத்தேன், ‘என்னால் விளையாட முடியாவிட்டால், மற்ற குழந்தைகளுக்கு என்னைப் போன்ற கதி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன்’. அந்த நேரத்தில், நான் சர்வதேச வீரர்களை உருவாக்குவதற்கு பயிற்சி அளிக்கத் தொடங்க முடிவு செய்தேன். அந்த முயற்சி இன்றும் தொடர்கிறது.” என்று டோப்போ கூறுகிறார்.
டோப்போ விளையாடுவதை விட்டுவிட்டு உடனடியாக பயிற்சிக்கு திரும்பவில்லை. அவர் முதலில் ஒரு ரேஷன் கடையைத் தொடங்கினார். அது ஒரு கிராமத்தில் விறுவிறுப்பான வியாபாரம் செய்ததாக அவர் கூறுகிறார். இன்றும், எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரே ஒரு கடை மட்டுமே உள்ளது. அவர் போதுமான அளவு சேமித்த பிறகுதான், டோப்போ 2000 ஆம் ஆண்டில் தனது கிராமத்தில் ஒரு தூசி நிறைந்த மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில், அவர் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை மட்டுமே சேர்த்தார். “இந்த யோசனை அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
படிப்படியாக, அவர் தனது கிராமம் மற்றும் பிற அண்டை பகுதிகளில் உள்ள வீரர்களை தேடத் தொடங்கினார். ஆனால் முதன்மையாக அவர் பெண் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறார். ஏனெனில் “சிறுவர்களைப் போலல்லாமல், கேட்காதவர்கள், பெண்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள்” என்று டோப்போ மேலும் கூறுகிறார்.
சுயமாக கற்றுக்கொண்ட பயிற்சியாளர், டோப்போவின் பாணி பழமையானது. அவர் “தலை முதல் கால் வரை மற்ற தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களைக் கவனிப்பதன் மூலம்” சிறந்த நுணுக்கங்களை கற்று கொடுக்கிறார். மேலும் அந்த முறைகளை தனது பயிற்சியில் உள்வாங்கி, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் தனது பயிற்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சில ஆண்டுகளில், அவரது குழு – நேரு யூத் கிளப் – போட்டிகளுக்காக கிராமத்திற்கு வெளியே பயணம் செய்யத் தொடங்கியது. ஆனால் அதற்கு அதிகம் செலவு ஆனது.
“நான் ஹாக்கியில் கவனம் செலுத்தியதால், என் வாழ்க்கையில் மற்ற அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக நான் எனது கடையை மூட வேண்டியிருந்தது – நான் இங்கே, அங்கே, எல்லா இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நன்றாகச் செய்து கொண்டிருந்த தொழிலுக்கு என்னால் நியாயம் செய்ய முடியவில்லை. இப்போது இல்லாத என் மனைவி, இந்த திட்டத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்தாள், ஆனால் நான் என் குடும்ப வாழ்க்கையை கூட தியாகம் செய்தேன். சர்வதேச வீரர்களை உருவாக்குவதற்காக, நான் இதையெல்லாம் செய்தேன், ஒரே ஒரு ஜித் (தண்டனை).
அவரது கடை மூடப்பட்டது மற்றும் வேறு வருமானம் இல்லாததால், டோப்போ தனது குடும்பத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலத்தை அடமானம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “நான் யாரிடமும் உதவி பெற்றதில்லை, எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. எனவே, எனது அணியை கிராமத்திற்கு வெளியே போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல நிலத்தை அடமானம் வைத்தேன். அப்போதுதான் அவர்கள் கவனிக்கப்பட முடியும். நான் எனது குழுவுடன் எல்லா இடங்களிலும் சுற்றி வருகிறேன். டெல்லி, மும்பை, பஞ்சாப், ஹரியானா, நைனிடால், மேற்கு வங்காளம், பெனாரஸ், நாசிக்…” என்று அவர் கூறுகிறார்.
நிலத்தை அடமானமாக வைத்து கடன் கொடுத்தவர்களிடம் இருந்து ரூ.60,000 பெற்றார். பத்தாண்டுகளுக்கு மேலாகியும், டோப்போவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை, அதன் விளைவாக, நிலத்தை மீட்டெடுக்க முடியவில்லை. இன்று, அவரது ஒரே வருமான ஆதாரம் சக்வான் மரங்கள் (தேக்கின் மாறுபாடு) பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் விதைத்ததாகக் கூறுகிறார். “நான் அந்த மரங்களை விற்று அதன் மூலம் சுமார் 12-15,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அந்த பணத்தில் நான் எனது அணியுடன் நாடு முழுவதும் பயணம் செய்கிறேன்.
வருமானம் அவரது மற்ற செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. டோப்போ தனது தட்டில் உணவை வைக்க போராடும் நாட்கள் இருப்பதாகவும் கூறுகிறார். “சனிக்கிழமை மாதிரி, என்னிடமிருந்த 10-20 ரூபாய்க்கு சில ஸ்நாக்ஸ் சாப்பிட்டேன். அவ்வளவுதான், ”என்று அவர் கூறுகிறார். அவர் பயன்படுத்தும் மொபைல் போன் கூட – மிக அடிப்படையான மாதிரி போன் – உள்ளூரில் இருக்கும் ஒரு பாதிரியாரால் அவருக்கு வழங்கப்பட்டது.
கஷ்டங்கள் இருந்தபோதிலும், வைரத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் இளம் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது தான் அவரைத் தொடர வைக்கிறது என்று டோப்போ கூறுகிறார். “இதைச் செய்ய நான் பிறந்தேன். நான் இறக்கும் வரை இதைத்தான் செய்வேன்.” என்று அவர் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“