17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் களமாடிய நிலையில், அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின.
இந்நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட இந்தத் தொடரில், நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பெங்களுருவில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பரோடா - மும்பை அணிகள் மோதுகின்றன. மாலை 4:30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் டெல்லி - மத்திய பிரதேசம் அணிகள் மோத உள்ளன. அரைஇறுதியில் வெற்றியை ருசிக்கும் அணிகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு அரங்கேறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
அதிரடி சரவெடி - கேப்டனாக ஜொலிக்கும் ரஹானே
இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி டிராபி தொடருக்கான மும்பை அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தனது பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து அற்புதமான சாதனை படைத்துள்ளார். அவர் இதுவரை 6 போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில், அதில் 4 அரை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, ஷிவம் துபே மற்றும் இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய நட்சத்திர வீரர்கள் கொண்ட மும்பை பேட்டிங் வரிசையை வழிநடத்திய பெருமையையும் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Syed Mushtaq Ali Trophy: How Ajinkya Rahane has led the show for Mumbai in SMAT after IPL 2025 Auction pick
36 வயதான ரஹானே, கடந்த மாதம் நடந்த ஐ.பி.எல் 2025 வீரர்கள் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் விற்கப்படவில்லை. ஆனால் இறுதியில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் (கே.கே.ஆர்) ரூ. 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த ஏலத்திற்கு முன்பு வரை அவரது டி20 பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலை நீடித்தது. ஆனால், கே.கே.ஆர் அவருக்கான ஏலத்தை வென்ற பிறகு, ரஹானே சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார்.
சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்கு திரும்பியவுடன், ஆரம்பத்தில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்த ரஹானே, பிரித்வி ஷாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமாடினார். ஆந்திராவுக்கு எதிரான கடைசி குரூப்-ஸ்டேஜ் ஆட்டத்தில், தோல்வியடைந்தால் மும்பை சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் இருந்து வெளியேறும் என்கிற சூழல் நிலவியது. இத்தகையை இக்கட்டான தருணத்தில், ஆந்திராமும்பைக்கு 230 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
நடப்பு தொடரில் இப்படியான வெற்றி இலக்கை எந்தவொரு அணியும் எட்டியது கிடையாது. அப்படித்தான் மும்பை அணிக்கும் நடக்கும் பலரும் எண்ணினார்கள். ஆனால், அவர்களின் கணக்கை உடைத்தார் ரஹானே. 54 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் என 95 ரன்கள் குவித்து மரண அடி அடித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தைப் பார்த்து திகைத்துப் போனது ஆந்திரா. 20 ஓவர்களில் 3 பந்துகளை மிச்சம் வைத்து, மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசிக்க வழிவகை செய்தார்.
இந்தப் போட்டியுடன் நின்று விடாமல், காலிறுதி ஆட்டத்திலும் தனது ருத்தர தாண்டவத்தை தொடர்ந்தார் ரஹானே. மும்பை எதிர்கொண்ட விதர்பா அணி 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது. ஏற்கனவே, அதிக ரன் கொண்ட இலக்கை வெற்றிகரமாக சேஸ் அணி என்ற சாதனையை முறியடித்த நம்பிக்கையுடன் மும்பை அணி இருந்தது. வழக்கம் போல் ரஹானே 45 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து மீண்டும் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் ஒரு தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மும்பை கேப்டன் என்கிற சாதனையை அவர் படைத்தார்.
இந்தியாவின் 3 ஃபார்மெட் அணிகளில் இருந்தும் ஓரம் கட்டப்பட்டு இருக்கும் ரஹானே, சில வாரங்களுக்கு முன்னர் வரை டி20-களில் அவரது ஆட்டம் முடிந்துவிட்டது போல் தோன்றியது. மேலும் ஐ.பி.எல் 2025 ஏலத்தின் முதல் சுற்றில் அவர் எடுக்கப்படாதது, அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருந்தது. ஆனால், ஏலத்தில் அவரை கே.கே.ஆர் அணி எடுத்தது, ரஹானேவை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதனால், அவர் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
இது கே.கே.ஆர் அணிக்கு கூடுதல் பலமாக அமைத்துள்ளது. மேலும், மும்பை அணியை வழிநடத்தி வரும் அவரது திறனை கே.கே.ஆர் நிர்வாகத்தினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். கே.கே.ஆர் அணிக்கு அடுத்த கேப்டன் என அவர்களால் ஏலத்தில் அதிக தொகைக்கு (23.75 கோடி) எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரின் பெயர் அடிப்பட்டு வரும் சூழலில், இப்போது ரஹானேவின் பெயரும் அடிப்பட்டு வருகிறது. ஒருவேளை, சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை சாம்பியன் பட்டத்தை வாகை சூடினால், கே.கே.ஆர் அணி ரஹானேவை கேப்டனாக நியமிக்கும் வாய்ப்புகள் அதிகம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் ரஹானேவின் ஸ்கோர்கள்:
84(45) vs விதர்பா
95(54) vs ஆந்திரப் பிரதேசம்
22(18) vs சர்வீசஸ்
நாகாலாந்துக்கு எதிராக பேட் செய்யவில்லை
68(35) vs கேரளா
52(34) vs மகாராஷ்டிரா
13 (13) vs கோவா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“