/tamil-ie/media/media_files/uploads/2018/06/s323.jpg)
ஆசைத் தம்பி
வங்கதேசம் முழுவதும் நேற்று விழாக் கோலம் பூண்டிருக்கும். பெண்கள் அணி என்பதால் அதில் வெறித்தனம் சற்று குறைந்திருக்கலாம். ஆனால், கொண்டாட்டம் கன்ஃபார்ம். ஏனெனில், மலேசியாவில் நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதன் முறை ஒரு சர்வதேச கோப்பையை வென்றுள்ளது வங்கதேச மகளிர் அணி. இது சாதாரண சாதனையல்ல... வங்கதேசத்தில் கிரிக்கெட் அணி என்றால் அது ஆண்கள் கிரிக்கெட் அணி தான். பெண்கள் அணியை ரசிகர்கள் மட்டுமல்ல... வங்கதேச கிரிக்கெட் போர்டே சீரியஸாக எடுத்துக் கொண்டது கிடையாது. ஆனால், தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியால் முடியாத ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறது வங்கதேச பெண்கள் கிரிக்கெட் அணி.
இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?
முதலில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி கேப்டன் சல்மா, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் 11 ரன்னில் அவுட்டாக, அதிரடி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 7 ரன்னில் வெளியேற்றப்பட்டார். வங்கதேச பவுலர்களின் கட்டுக்கோப்பாக பந்துவீச்சில், இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து சரண்டர் ஆனார்கள். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 56 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஒரு வீராங்கனை கூட பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் மட்டும் சேர்த்தது.
எளிய இலக்கை குறிவைத்து களமிறங்கிய வங்கதேசம், விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசி ஓவரின் கடைசி பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை மிக்க வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் மகா மட்டம் என்றே கூறலாம். கடைசி பந்தில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த இரண்டு ரன்களையும் வங்கதேச வீராங்கனைகள் ஓடியே தான் எடுக்கின்றனர். ஆனால், த்ரோவும் சரி, விக்கெட் கீப்பிங்கும் சரி அந்த இரண்டு ரன் எடுக்கும் போது ஏற்றுக் கொள்ளவே முடியாத அளவிற்கு மெதுவாக இருந்தது.
மோசமான பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கால் ஆறு முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி தோற்று பரிதாபத்திற்குரிய நிலைக்கு சென்றது.
அதேசமயம், நாம் முன்பே குறிப்பிட்டது போல, ஒட்டுமொத்த வங்கதேசமும் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது. 2007ம் வருடம் தான் வங்கதேச பெண்கள் கிரிக்கெட் அணி, சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கியது. இதற்கு முன்னதாக 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மட்டும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்ற வங்கதேச அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை. இம்முறை முதன்முதலாக இறுதிப் போட்டிக்கும் முன்னேறி, கோப்பையையும் வசப்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே வங்கதேச பெண்கள் அணியின் ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. டாப் பொசிஷனில் உள்ள தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்திய வங்கதேசம், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம், வங்கதேச பெண்கள் அணிக்கு உள்ளூரில் ஆதரவு அதிகரிக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நம்புகிறது. வங்கதேசத்தில் உள்ள பல பெண்கள் கிரிக்கெட் அகாடமிகளில் டாய்லெட் வசதி கூட கிடையாது என்பது பலருக்கும் தெரியாது. இதற்கான நிதியை எவ்வளவோ முறை கேட்டும், கிரிக்கெட் நிர்வாகம் பெண்கள் கிரிக்கெட் தானே என அலட்சியப்படுத்தி வந்தது.
குறிப்பாக போக்ரா எனும் பகுதியில் உள்ள ஷாஹீத் சந்து ஸ்டேடியத்தில் பெண்களுக்கு என தனியாக பயிற்சி வசதி கேட்டு பல முறை விண்ணப்பித்தும், வங்கதேச கிரிக்கெட் அகாடமி அதை கண்டுகொள்ளவில்லை. இதனால், ஹபிபுல் பஷர் எனும் பயிற்சியாளர் அங்கிருந்த டாய்லெட் ஒன்றை நன்கு சுத்தம் செய்து, அதையே வீராங்கனைகள் தங்கும் இடமாகவும், உபகரணங்களை வைத்துக் கொள்ளும் இடமாகவும் மாற்றிவிட்டார். அவரிடம் பயிற்சி பெறும் கிரிக்கெட் வீராங்கனைகள் அதையே தங்கள் பயிற்சிக்காக உபயோகித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட நிதி நெருக்கடி, அலட்சியம், புறக்கணிப்பு என பல தடைகளுக்கு மத்தியில், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியிருக்கிறது வங்கதேசம். இப்போது சொல்லுங்கள் இது சாதாரண சாதனையா?
ஆனால், இந்த வெற்றி தற்போது பல முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. வங்கதேச மகளிர் அணியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருவதால், தனியாக ஸ்பான்சர்ஷிப் ஏற்படுத்தும் முடிவில் உள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இதன்மூலம், பெண்கள் அணியின் பயிற்சி தரம் மேலும் உயரும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.
அதுசரி, வங்கதேச அணியின் இந்த வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக இருப்பவர் யார் தெரியுமா? இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மறைந்த 'மக்கள் ஜனாதிபதி' அப்துல் கலாம் கையால் அர்ஜுனா விருது வென்றவருமான அஞ்சு ஜெயின் தான் வங்கதேச மகளிர் அணியில் தலைமை பயிற்சியாளராக இருப்பவர். இந்தியரின் பயிற்சியின் கீழ் தான், இந்திய அணியையே வீழ்த்தியிருக்கிறது வங்கதேச மகளிர் அணி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.