T20 World Cup 2024 | Indian Cricket Team | India Vs Australia: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. அதாவது இந்திய நேரப்படி நாளை செவ்வாய்க்கிழமை காலை நடக்கும் போட்டியுடன் முடிவைடைய உள்ளது.
இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது வரை 2 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள மற்ற 2 இடங்களுக்கு 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. குரூப் 2-ல் உள்ள 2 இடங்களுக்கு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் தகுதி பெற்று அரைஇறுதியை உறுதி செய்துள்ளன.
ஆனால், குரூப் 1-ல் மட்டும் எந்த அணியும் தற்போது வரை அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 இடம் பெற்றுள்ளன நிலையில், இதுவரை நடந்த 2 போட்டியில் இரண்டிலுமே தோல்வியுற்ற வங்கதேசம் அரைஇறுதிக்கான போட்டியில் மற்ற 3 அணிகளிடம் இருந்து ஒதுக்கியுள்ளது.
அதனால், அரைஇறுதிக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த அணிகளில் இந்தியா ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணியை வீழ்த்தி 4 புள்ளியுடன் குரூப் 1-ல் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், வங்கதேச அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானிடம் தோற்று 2 புள்ளியுடன், +0.223 நெட் ரன்ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவிடம் தோற்று ஆஸ்திரேலியாவை சுருட்டிய ஆப்கானிஸ்தான் 2 புள்ளியுடன், -0.650 ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு எப்படி?
இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற இன்று திங்கள்கிழமை செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திட வேண்டும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் (+2.425) வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை, இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால், ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம், ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும். இதனால், இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவே முழு மூச்சுடன் போராடும்.
மழை அச்சறுத்தல்
இந்த போட்டிக்கு முன் மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், போட்டி ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா அதே 2வது இடத்தில் 3 புள்ளியுடன் இருக்கும்.
இதன் பிறகு நடக்கும், ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால், அந்த அணி மொத்தமாக 4 புள்ளிகளை பெற்று, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் முன்னேறி விடும். இப்போட்டியில், வங்கதேச அணி வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் 3-வது மற்றும் 4-வது இடங்களை மட்டுமே பிடிக்கும்.
இதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு முன்னேறி விடும். எனவே, மழையால் இந்த போட்டி கைவிடப்பட்டாலும் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவது உறுதியாகியுள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றால் கூட, மேலே குறிப்பிட்டது போல நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்திய நல்ல நிலையில் இருந்தால், இந்தியாவுக்கான அரைஇறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.