pakistan-vs-srilanka | sports | cricket: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அபார வெற்றி பெற்றது. இதேபோல், நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் (+2.690 நெட் ரன்ரேட்) இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை (-0.200) மற்றும் பாகிஸ்தான் ( -1.892) அணிகள் புள்ளிகள் பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் உள்ள வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா அல்லது இலங்கையா?, இதில் யாருக்கு வாய்ப்புள்ளது? என்று இங்கு பார்க்கலாம்.
இலங்கை vs பாகிஸ்தான்
சூப்பர் 4 ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை இலங்கை நாளை வியாழக்கிழமை இலங்கை அணியை சந்திக்கவுள்ளது. பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடப்புச் சாம்பியனான இலங்கை தங்களது சொந்தப் பலனைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாடும்.
கொழும்பில் மழை
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதும் கொழும்பில் 90% மழைப்பொழிவு இருக்கும் என்றும், காற்றில் ஈரப்பதம் 83%, காற்று மணிக்கு 21 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் அக்குவெதர் அறிக்கை கூறியுள்ளது.
மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால்.... இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது யார்?
இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், சிறந்த நெட் ரன்ரேட்டைக் கொண்ட அணி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும். தற்போதைய நிலைமைகளின்படி, நெட் ரன்-ரேட்டில் பாகிஸ்தானை விட இலங்கை முன்னிலையில் உள்ளது.
பாகிஸ்தான் நாளை இலங்கையை தோற்கடித்தால், இந்தியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் உறுதி செய்யும். பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் இதுவரை மோதியதில்லை. இந்திய அணி 7 முறை ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் 2 முறை புகழ்பெற்ற கோப்பையை வென்றுள்ளது. எனவே, இலங்கை - பாகிஸ்தான் அணிகளில் எந்த அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதனை பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“