Chennai Super Kings | Ms Dhoni | IPL 2024: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
சிவம் துபே (51), ருதுராஜ் கெய்க்வாட் (46), ரச்சின் ரவீந்திரன் (46) ஆகியோர் சிறப்பாக மட்டையைச் சுழற்றி வலுவான இலக்கை நிர்ணயிக்க உதவினர். இதனையடுத்து வந்த குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Tiger abhi zinda hai’: How cricketers reacted to that MS Dhoni catch in CSK vs GT IPL 2024 game
சென்னை அணியில் விக்கெட் கீப்பர் எம்.எஸ் தோனி உட்பட 12 வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர் என்றால் மிகையாகாது. சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் பேட்டிங்கில் வெளுத்து வாங்க, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதேபோல், மதீஷ பத்திரன தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டை எடுத்தார்.
பார்ட்-டைம் பவுலராக வந்த டேரில் மிட்செல் ஒரு விக்கெட்டை கைப்பற்றி உத்தவேகம் கொடுத்தார். பேட்டிங்கில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன் எடுத்த ஜடேஜா, பவுலிங்கில் 2 ஓவருக்கு 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து சிறப்பாக செயல்பட்டார். இளம் அறிமுக வீரரான சமீர் ரிஸ்வி ரஷித் கானுக்கு எதிராக 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். இதேபோல், அனுபவ வீரரான அஜிங்க்யா ரஹானே டேவிட் மில்லர் அடித்த பந்தை லாவகமான டைவ் மூலம் கேட்ச் பிடித்து பீல்டிங்கில் பிரமிக்க வைத்தார்.
ஒட்டுமொத்தமாக சென்னை அணியின் வீரர்கள் ஆட்டம், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சி.எஸ்.கே-வின் புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் ஃபயர் எமோஜி விட்டு பட்டாசு வெடிக்கும் அளவுக்கு இருந்தது. முக்கியஸ்தர்களுக்கு நிகழ்வின் இறுதியில் தான் மரியாதையை செய்யப்படும். அவ்வகையில், தனது கேப்டன் பதவியை இளம் வீரரிடம் ஒப்படைத்ததாலும், சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான்! புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்! உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே... நீ சிங்கம் தான்! - என்கிற பாடலுக்கு களத்தில் சிறப்பாக செயல்பட்டார் எம்.எஸ் தோனி.
குறிப்பாக, 7.3-வது ஓவரில் டேரில் மிட்செல் வீசிய பந்தில் விஜய் சங்கர் எட்ஜ் அடித்த, அதனை ஒரு அற்புதமான டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார் தோனி. அவர் பேட்டிங் செய்ய களமிறங்காத நிலையில், அவரின் இந்த அபார கேட்ச்சைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரமாக கொண்டாடினர். 42 வயதான தோனி அடித்த டைவ் 2.27 மீட்டர் இருக்கும் என அளவிடப்பட்டது.
தோனியின் அசத்தலான கேட்சை கண்டு சேப்பாக்கத்திலும், சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் வியந்து போன நிலையில், அவர் குறித்து முன்னணி வீரர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
புலி உயிருடன் இருக்கிறது: சுரேஷ் ரெய்னா
“இந்த விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க சார், புலி இன்னும் உயிரோடதான் இருக்கு மாஹி பாய். எப்போதும் வலுவாகவும், சுற்றியிருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தவும் அவர் இருக்கிறார் ," என்று தோனி கேட்ச் எடுக்கும் வீடியோவுடன் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரும் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'கடிகாரத்தை விஞ்சிய தோனி': ஸ்டீவ் ஸ்மித்
“தோனி கடிகாரத்தைத் திருப்பிப் போட்டு விட்டார் , இல்லையா? அந்த டைவ்வை பாருங்கள். அவர் பயந்த தூரம் 2.27 மீட்டர், கவரேஜில் வந்த அது ஒரு சிறந்த கேட்ச். அவர் சற்று நெருக்கமாக நின்று கொண்டிருந்தார், ஏனெனில் டாரில் மிட்செல் வேகமான பந்துவீச்சாளர் அல்ல, அதனால் அவர் நன்றாகவும் இறுக்கமாகவும் இருந்தார். அவரின் ரியாக்சனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை, ஆனால் அவரது ரியாக்சன்கள் நிச்சயமாக இன்னும் உள்ளன, இல்லையா? தரையை நன்றாக மூடி, அந்த வலது கையில் கேட்ச் எடுக்கிறார்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
ஆட்டத்தை மாற்ற தோனி பேட்டிங் செய்ய வேண்டியதில்லை: ஸ்டூவர்ட் பிராட்
“தோனி இன்னும் சிறப்பாக இருக்கிறார். அவர் கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான். அப்படித் தான் நான் அவரைப் பற்றி உணர்கிறேன், அவர் ஒரு விளையாட்டில் பேட் செய்ய வேண்டியதில்லை, இன்னும் ஒரு நொடிக்குள் ஆட்டத்தை நகர்த்த அல்லது மாற்றும் தருணத்தை அவர் நிர்வகிக்கிறார். அவரது அணியினர் அவருக்காக மகிழ்ச்சியடைந்தனர், சென்னையில் உள்ள ரசிகர்களும் அதையே விரும்பினர், எனவே இது இரவில் ஒரு சிறந்த தருணம், ”என்று ஸ்டூவர்ட் பிராட் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறினார்.
'என்ன கேட்ச்': இர்பான் பதான்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இந்த கேட் குறித்து உடனடியாக ட்வீட் செய்து, "உத்தா தோனி.... என்ன கேட்ச்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஆட்டத்தில் அஜிங்க்யா ரஹானே சிறப்பான கேட்சை எடுத்த நிலையில், மற்றொரு ட்வீட்டில், பதான், "தோனியின் கேட்ச்சைத் தேர்ந்தெடுப்பீர்களா அல்லது ரஹானேவைத் தேர்ந்தெடுப்பீர்களா? எனது தேர்வு ரஹானே, உங்களுடையது?" என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“