worldcup 2023 | indian-cricket-team: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஒவ்வொரு அணியும் 9 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் இந்தியாவுக்கு வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து போன்ற பலம் குறைந்த அணிகளுடன் தலா ஒரு போட்டி உள்ளது. இதில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தினால், இந்தி அணி 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகள் பெற்று விடும். எஞ்சியுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் எதிரான போட்டிகளில் இந்திய அணி குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் போதும்.
இப்படி நடந்தால் இந்தியா 12 புள்ளிகளை பெற்றுவிடும். இருப்பினும், இந்திய அணி தற்போது இருக்கும் ஃபார்மை பார்க்கும் போது எஞ்சிய 6 போட்டிகளில் அதிகபட்சமாக ஆறிலும், குறைந்தபட்சம் நான்கிலும் வெற்றி பெற்று விடும் போல் தெரிகிறது. இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் அதிகபட்சமாக 18 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 14 புள்ளிகளையும் பெற வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், இந்திய அணி முதல் 4 இடங்களுக்கு எளிதில் முன்னேறிவிடும். மேலும், இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பும் உறுதியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“