/indian-express-tamil/media/media_files/2025/05/22/WQAqqVP0Qe0tK03piutE.jpg)
முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க, மும்பை அணி, பெங்களூரு, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளில் இருந்து இரண்டு அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்கம் முதலே ரன்கள் சேர்க்க தடுமாறியது. 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி 11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நிலையில், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுள் முன்னேற என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்று இங்குப் பார்க்கலாம். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதன் மூலம், முதல் தகுதி சுற்றில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லலாம். தோற்கும் பட்சத்தில் எலிமினேட்டர் சுற்றில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்
மும்பை அணி எப்படி முதல் இரண்டு இடங்களுக்குள் எப்படி நுழைய முடியும்?
நடப்பு தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள அணிகளை முந்த வேண்டும். தற்போது 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி, கடைசி இரண்டு போட்டிகளை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது. மறுபுறம், பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, மீதமுள்ள போட்டிகள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக ஆட உள்ளது.
இதற்கிடையில், 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ், கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுடன் விளையாடுகிறது. முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க, மும்பை அணி, பெங்களூரு, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளில் இருந்து இரண்டு அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும், மேலும் மும்பை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில், மும்பை அணியின் நெட் ரன்ரேட் அல்லது புள்ளிகளின் அடிப்படையில் இரண்டு அணிகளை முந்தி, முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைவதற்கான கதவு திறக்கும்.
1) பெங்களுரு, பஞ்சாப் அணிகள் கடைசி இரண்டு போட்டிகளில் தோற்றால், குஜராத் 22 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 18 புள்ளிகளுடன் மும்பை 2-வது இடத்திலும், தலா 17 புள்ளிகளுடன் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் 3 மற்றும் 4-வது இடங்களில் இருக்கும்.
2) குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் தங்களது கடைசி இரண்டு போட்டிகளிலும் தோற்றால், 19 புள்ளிகளுடன் பஞ்சாப் முதல் இடத்திலும், தலா 18 புள்ளிகளுடன் மும்பை மற்றும் குஜராத் அணிகள் 2 மற்றும் 3-வது இடத்தில் இருப்பார்கள். 17 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 4-வது இடத்தைப் பிடிக்கும்
3) பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் தங்களது கடைசி இரண்டு போட்டிகளிலும் தோற்றால், 21 புள்ளிகளுடன் பெங்களூரு முதல் இடத்திலும், தலா 18 புள்ளிகளுடன் மும்பை மற்றும் குஜராத் அணிகள் 2 மற்றும் 3-வது இடத்திலும், 17 புள்ளிகளுடன் பஞ்சாப் 4-வது இடத்திலும் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.