worldcup 2023 | india-vs-pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் - இமாம்-உல்-ஹக் ஜோடி களமிறங்கிய நிலையில், இந்த ஜோடியை உடைக்க இந்திய பவுலர்கள் முதல் 7 ஓவர்களாக போராடினர். அப்போது 7.6 -வது ஓவரில் சிராஜ் தனது துல்லியமான பந்துவீச்சால் அப்துல்லா ஷபீக்கை (20 ரன்) எல்.பி.டபிள்யூ எடுத்தார்.
பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் உடன் ஜோடியில் இருந்த தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (36 ரன்) ஹர்திக் பாண்டியா வீசிய 12.3 வது ஓவரில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 57 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், அவர் சிராஜ் வீசிய 29.4 வது ஓவரில் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார்.
களத்தில் இருந்த முகமது ரிஸ்வானுடன் சவுத் ஷகீல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த ஜோடியை உடைக்க ரோகித் குலதீப்பை அழைத்து வந்தார். குலதீப் தனது சுழல் வலையை விரித்து போட்ட நிலையில், அவர் வீசிய 32.2வது பந்தில் சவுத் ஷகீல் (6 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது (4 ரன்) குலதீப் வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு பாகிஸ்தானுக்கு தொடர் விக்கெட் சரிவு ஏற்பட தொடங்கியது. களத்தில் நீண்ட இருந்த முகமது ரிஸ்வான் விக்கெட் சரிவை மீட்டுடெப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் போல்ட்-அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், பாகிஸ்தான் அணி 191 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்தியாவுக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தானை வாரிச் சுருட்டிய இந்திய அணி பந்துவீச்சு வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய அனைவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
கேப்டன் பாபர் அசாம் தனது விக்கெட்டை பறிகொடுத்த போது பாகிஸ்தான் 155 ரன்கள் எடுத்து இருந்தது. ஆனால், அடுத்த 36 ரன்கள் அதாவது 191 ரன்கள் எடுப்பதற்குள் மொத்த விக்கெட்டையும் பறிகொடுத்தது. அந்த அணியில் பாபர் அசாம் எடுத்த 50 ரன்கள் அதிகபட்ச ரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“