worldcup 2023 | pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 58 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 283 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 49 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது.
அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களும் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ரஹ்மத் ஷா 77 ரன்களும், கேப்டன் ஹெஷ்மத்துல்லா ஷாஹிதி 48 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பு எப்படி?
ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி 3ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.400 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளைப் போல் பாகிஸ்தானும் புள்ளிகள் பட்டியலில் நடுவில் சிக்கி தவித்து வருகிறது.
நடப்பு உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலைப் பொறுத்தவரை, 10 புள்ளிகளுடன் இந்தியா (+1.353) முதல் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து (+1.481) இரண்டாவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா (+2.212) 3வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா (-0.193) 4வது இடத்திலும் உள்ளன.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளன. அதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் உடனான பந்தயத்தில் நீடித்து வருகிறது. எனினும், இந்த 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு தோல்வி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து விடும்.
பாகிஸ்தான் அணிக்கு இனி வரும் 4 போட்டிகளும் சற்று சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி வருகிற வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவை சென்னையில் வைத்து சந்திக்கிறது. 31ம் தேதி வங்கதேச அணியை கொல்கத்தாவிலும், நவம்பர் 4ம் தேதி நியூசிலாந்தை பெங்களூருவிலும், நவம்பர் 11ம் தேதி இங்கிலாந்தை கொல்கத்தாவிலும் எதிர்கொள்கிறது. இவை அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை ஓரளவிற்கு உறுதி செய்து விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.