IPL 2024 | Chennai Super Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெற்றன. சென்னையில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கி நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றிகள் மூலம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் தங்களது பிளே - ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL playoff scenarios: Bring out your calculator, here’s how RCB or CSK can still qualify
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 13 லீக் போட்டிகளில் 7ல் வெற்றி, 6ல் தோல்வி என 14 புள்ளிகள் மற்றும் +0.528 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மறுபுறம், இந்த தொடருக்கான தொடக்க ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 6 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றியை ருசித்து தொடரில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது அந்த அணி இதுவரை ஆடிய 13 போட்டிகளில் 6ல் வெற்றி 7ல் தோல்வி என 12 புள்ளிகள் மற்றும் +0.387 நெட் ரன்ரேட்டுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
நடப்பு சீசனுக்கான பிளே - ஆஃப் ரேஸில் உயிர்ப்புடன் இருக்கும் பெங்களூரு, அந்த வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்திக் கொள்ள மீதமுள்ள ஒரு போட்டியில் நல்ல நெட் ரன்ரேட்டுடன் வெற்றியைப் பெற வேண்டும். சொந்த மண்ணில் வருகிற 18 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கும் அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை பெங்களூரு அணி எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில், தற்போது பெங்களூரு அணி பிளேஆஃப்க்கு எப்படி தகுதி பெறலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஃபாஃப் டு பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளேஆஃப்க்குள் நுழைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவசியம் வெற்றி பெற வேண்டும். அத்துடன் மற்ற அணிகளின் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைய காத்திருக்க வேண்டும்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர்களின் நெட் ரன்ரேட்டை முந்த பெங்களூரு அணி குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். உதாரணமாக, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், அவர்கள் சென்னை அணியை 182 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
ஒருவேளை, பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டால், 11 பந்துகளை மீதம் வைத்து அவர்கள் அந்த இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும். அதே நேரத்தில், ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் அவர்களின் மீதமுள்ள 2 போட்டிகளில் தோல்வியடை வேண்டும். ஒரு போட்டியில் அவர்கள் வென்றால் கூட அது பெங்களூருவுக்கு பின்னடைவை தரும்.
சி.எஸ்.கே-வுக்கு ஒரு வெற்றி போதும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை, அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தால், ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் அவர்களின் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும். அப்படி நடந்த ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகளின் 16 புள்ளிகளுடன் முடிப்பார்கள். அப்போது, நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோற்றால் கூட, நல்ல நெட் ரன்ரேட்டுடன் இருக்க வேண்டும். அதாவது, நெட் ரன்ரேட்டில் பெங்களூருவை விட முன்னிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் போட்டி நாக்-அவுட் ஆட்டமாக இருக்கும்.
ஐதராபாத் ராஜஸ்தானை முந்தும் வாய்ப்பு
பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவர்களின் சொந்த மண்ணில் கடைசி இரண்டு லீக் போட்டிகளை ஆடுகிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடவுள்ள அந்த அணி குஜராத் டைட்டன்ஸ் (மே.16 சனிக்கிழமை) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (மே.19 ஞாயிற்றுக்கிழமை) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
இந்த இரண்டு ஆட்டங்களிலும் அவர்கள் வெற்றி பெற்றால், மொத்தமாக 18 புள்ளிகளைப் பெறலாம். அப்படி நடந்தால் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகும். ஒருவேளை அவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் சிக்கலில் இருக்கக்கூடும். தற்போது வரை அவர்களின் தலைவிதி அவர்கள் கையில் தான் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“