India-vs-south-africa | rinku-singh: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. இதில், 'பாக்சிங் டே' போட்டியாக முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்தார்.
தற்போது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா இன்று மதிய உணவு இடைவேளையின் போது 100 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 147 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
பீல்டிங் செய்த ரிங்கு சிங்
இந்த நிலையில், இன்றைய போட்டியின் போது இந்திய வீரரான ரிங்கு சிங் மாற்று வீரராக வந்து பீல்டிங் செய்தார். அவர் இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், அவர் எப்படி பீல்டிங் செய்ய வந்தார் என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
ரிங்கு சிங் இந்திய அணிக்கான 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இடம் பெற்று இருந்தார். அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனாலும் மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக அணியில் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில், தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மோதும் நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். எனவே, அவரது இடத்தை நிரப்ப இந்திய நிர்வாகம் ரிங்கு சிங்கை அணியில் சேர்த்துள்ளது. அதனால் தான் ரிங்கு சிங் மாற்று வீரராக களம் இறக்கி பீல்டிங் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“