டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்த ரூ.125 கோடியில், ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத 3 பேர் உட்பட 15 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி வழங்கப்படும்; மற்ற முக்கிய பயிற்சியாளர் குழுவிற்கு தலா ரூ.2.5 கோடி வழங்கப்படும், இதில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் அடங்குவர்; மற்றும் மூத்த தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் உட்பட ஐந்து உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரிய வந்துள்ளது.
இதுதவிர, பிற முக்கிய ஊழியர்களுக்கும் வெகுமதி வழங்கப்படும். மூன்று பிசியோதெரபிஸ்ட்கள், மூன்று த்ரோடவுன் நிபுணர்கள், இரண்டு மசாஜ் நிபுணர்கள் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
நான்கு ரிசர்வ் வீரர்களான பேட்ஸ்மேன்கள் ரிங்கு சிங் மற்றும் ஷுப்மான் கில், வேகப்பந்து வீச்சாளர்கள் அவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு ரூ 1 கோடி வழங்கப்படும். தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இருந்தனர், ஆனால் விளையாடவில்லை. அவர்களுக்கு தலா ரூ.5 கோடி வழங்கப்படும்.
உலகக் கோப்பைக்கு சென்ற இந்திய அணியில் மொத்தம் 42 பேர் இருந்தனர். அணியின் வீடியோ ஆய்வாளர், ஊடக அதிகாரிகள் உட்பட அணியுடன் பயணித்த பி.சி.சி.ஐ ஊழியர்கள் மற்றும் அணியின் தளவாட மேலாளர் ஆகியோருக்கும் வெகுமதி வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.
"பி.சி.சி.ஐ-யிடமிருந்து அவர்கள் பெறும் பரிசுத் தொகை குறித்து வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் செலவுப்பட்டியல் சமர்ப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று பி.சி.சி.ஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரு நாள் கழித்து, பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பரிசுத் தொகையை அறிவித்தார். “ரூ. 125 கோடியைப் பொறுத்தவரை, இது வீரர்கள், துணை ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களையும் உள்ளடக்கும். எல்லோருக்கும்,” என்று ஜெய் ஷா கூறியிருந்தார்.
மூன்று பிசியோதெரபிஸ்ட்கள் கமலேஷ் ஜெயின், யோகேஷ் பர்மர் மற்றும் துளசி ராம் யுவராஜ்; மூன்று த்ரோடவுன் நிபுணர்கள் ராகவிந்திரா டிவிஜி, நுவான் உதேனேகே மற்றும் தயானந்த் கரனி, மற்றும் இரண்டு மசாஜ் நிபுணர்கள் ராஜீவ் குமார் மற்றும் அருண் கானடே; வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக உள்ள சோஹம் தேசாய் ஆகியோருக்கு வெகுமதி வழங்கப்படும்.
மேலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ரூ.11 கோடி ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில், எம்.எஸ் தோனியின் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது, பி.சி.சி.ஐ ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 1 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது, அதே நேரத்தில் துணை ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது. தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியபோதும், முதலில் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி என அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ.2 கோடியாகத் திருத்தப்பட்டது. துணை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு, தோனியின் அணி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணி மொத்தம் 12 கோடி ரூபாய் பெற்றது.
1983 இல் இந்தியா தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்றபோது, அதன் வீரர்களுக்கு வெகுமதி அளிக்க பி.சி.சி.ஐ.,யிடம் போதுமான பணம் இல்லை. பி.சி.சி.ஐ மறைந்த லதா மங்கேஷ்கரை அணுகியது, அவர் வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டார்.
* அணியின் வீடியோ ஆய்வாளர், உலகக் கோப்பையில் உள்ள பி.சி.சி.ஐ ஊழியர்கள், ஊடக அதிகாரிகள் மற்றும் அணியின் தளவாட மேலாளர் உள்ளிட்டோர் பரிசுத் தொகையைப் பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.