Chennai Super Kings | Ruturaj Gaikwad | IPL 2024: ஐ.பி.எல்.2024 தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) உள்ளது. தனது 5வது பட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் வென்ற நிலையில், அப்போது முதலே அணியின் நிழல் கேப்டனாக எப்படி தான் இருந்தேன் என்பதை ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், சி.எஸ்.கே-வை வழிநடத்த தயாராக இருக்கும்படி முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி கூறியது முதல் தன்னை எப்படி பக்குவப்படுத்திக் கொண்டார் என்பது பற்றியும் அவர் கூறியிருக்கிறார்.
நேற்று திங்கள்கிழமை சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்டார். சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவர் அளித்த முதல் பேட்டி இதுவாகும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How Ruturaj Gaikwad was groomed for CSK captaincy from 2022 and here’s what MS Dhoni told him
"2022 இல் அவர் (தோனி) என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அன்று அவர், 'அநேகமாக அடுத்த ஆண்டு அல்ல, ஆனால் அதன் பிறகு நீங்கள் அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெறலாம். எனவே அதற்கு தயாராக இருங்கள் என்றார்'. அதன் பிறகு, நான் எப்போதும் அதற்கு தயாராகிக்கொண்டிருந்தேன். இது (கேப்டன்) எனக்கு செய்தி போன்று வரவில்லை அல்லது நான் அதற்கு சற்று ஆச்சரியப்படவும் இல்லை. அல்லது அதிர்ச்சியடைவும் இல்லை.
உண்மையைச் சொல்வதானால், அது உண்மையில் ஆழமான உரையாடல் அல்ல. அது பற்றி விவாதிக்கப்பட்டபோது, அது மிகவும் கூலாக இருந்தது. நாங்கள் இருவர் மட்டுமே பேசிக்கொண்ட கூலான உரையாடல் அது. ஒருநாள் நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருகையில், அவர் வந்து நான் கேப்டனாக பொறுப்பேற்றதைப் பற்றி கூறினார். அவரது இடத்தை நான் நிரப்புவது சவாலானது. ஆனால் நான் நானாக இருக்க விரும்புகிறேன். இதேபோல், அணிக்குள் தொடர்ந்து நடந்து வரும் கலாச்சாரத்தை தொடர விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு, பயிற்சியாளர் ஃப்ளெமிங்கும் நானும் எப்போதும் கேப்டனின் விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் நான் எப்படி உணர்ந்தேன், என்ன பந்துவீச்சு மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன். அதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்ன என்பதைப் பற்றி பேசினோம். எனவே, ஆம், நாங்கள் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டிலும் ஒருவருக்கொருவர் உரையாடல் இருந்தது. அது உண்மையில் என்னை நானே கட்டமைக்க உதவியது." என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
சென்னை அணியைப் பொறுத்தவரையில், பல ஆண்டுகளாக அந்த அணியின் பலம் என்பது தொடர்ச்சிதான். முக்கிய அணியைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர, அணிக்குள் நிதானமான சூழ்நிலையை உருவாக்குதல், வீரர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பிற ஐ.பி.எல் அணிகளில் கேள்விப்படாத சுதந்திரத்தை வழங்குவது அவர்களின் தனிச்சிறப்பாகும். மற்ற அணி நிர்வாகங்களால் நிராகரிக்கப்பட்ட வீரர்கள் சென்னை அணியில் செழித்து வளர்வதைக் கண்டுள்ளோம். மேலும் ஒரு கேப்டனாக தன்னை வளர்க்க உதவிய அதே கலாச்சாரத்தைத் தொடர்வதில் கவனம் செலுத்துவேன் என்று கேப்டன் கெய்க்வாட் கூறினார்.
“கேப்டன்சியைப் பொறுத்தவரையில், நான் ஒரு குறிப்பிட்ட வகையான ரோலில் இருக்க விரும்பவில்லை. இப்போது விஷயங்கள் எப்படி இருக்கிறதோ அப்படி இருக்க விரும்புகிறோம். சி.எஸ்.கே-வின் கலாச்சாரத்தை அப்படியே தொடருவோம்.
நாங்கள் பெற்ற வெற்றி, நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்த விஷயங்கள் என அதில் ஒரு துளியைக் கூட நான் மாற்ற விரும்பவில்லை. அதேபோன்ற வெற்றியை மட்டுமே பெற விரும்புகிறேன். எனது சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறேன், முடிந்தவரை சுதந்திரம் கொடுக்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் சி.எஸ்.கே அணிக்காக விளையாடத் தொடங்கியதிலிருந்து அப்படி இயங்குகிறது. அதனால் உண்மையில் எதுவும் மாறவில்லை, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
அவர் கேப்டன்சி-க்காக தன்னையே தயார்படுத்திக் கொண்டார் என்பதை நம்மால் களத்தில் பார்க்க முடிகிறது. அணியை முழுதுமாக வழிநடத்துகிறார். தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒரு கேப்டனுக்கு, அவர் தன்னை ஒரு புதிய வீரர் போல் காட்டிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், அவர் ஐ.பி.எல் போன்ற ஒரு போட்டியை எப்படி அணுகுக வேண்டும், யதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்து தொலைதூர இலக்குகளை அடைய வேண்டும் என்பதையும் அவர் விளக்குகின்றார்.
"ஐ.பி.எல் போன்ற ஒரு போட்டியில், நீங்கள் 14 ஆட்டங்களில் 14 வெற்றி பெறப் போவதில்லை, வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நீங்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆட்டங்களில் தோல்வியடைவீர்கள். எனவே வெளிப்படையாக நீங்கள் ஒவ்வொரு விளையாட்டையும் அதே தீவிரத்துடன் அணுக வேண்டும். சில சமயங்களில் எதிரணி நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறது. சில நேரங்களில் டாஸ் முக்கியமானது. சில நேரங்களில், அது உங்களுக்குத் தெரியும். நாங்கள் சில விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டோம். எனவே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. மேலும் இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் சற்று வலுவாக இருப்பதாக நான் உணர்கிறேன். கூடுதலாக, ஒவ்வொரு அணியும் குறிப்பாக சொந்த மண்ணில் வலுவாக உள்ளது, ”என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளிடம் ஆகிய இரண்டு வெளிமைதானங்களில் நடந்த ஆட்டங்களில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று திங்கள்கிழமை வெற்றிப் பாதைக்கு திரும்பியது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளை எதிர்கொள்ளும் வகையில் சி.எஸ்.கே மீண்டும் களமிறங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“