ஆசைத் தம்பி
ஒருகாலத்தில் இந்திய கால்பந்து அணியின் ஃபிபா தரவரிசை என்ன தெரியுமா? 173. மிக மோசமான தரவரிசை இது. ஆனால், இன்று இந்தியாவின் தர நிலை 97. இது சாதாரண முன்னேற்றம் அல்ல.. இதற்கான இந்திய அணியின் உழைப்பு அபரிதமானது. அதிலும், தற்போதைய கேப்டன் சுனில் சேத்ரியின் பங்கு மகத்தானது.
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என வெளிநாட்டு வீரர்களை ரசிக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள், ஏனோ இந்திய கால்பந்து அணியையும் சரி, கால்பந்து வீரர்களையும் சரி, ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. கேரளா, மேற்கு வங்கம், வட கிழக்கு மாநில மக்கள் கிரிக்கெட்டை விட கால்பந்தை அதிகம் விரும்புகிறார்களே? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! அவர்கள் ரசிக்கிறார்கள் தான். ஆனால், இந்திய கால்பந்து வீரர்களை அல்ல... வெளிநாட்டு வீரர்களையே!.
வெளிநாட்டு வீரர்கள் ஜாம்பவான்கள் தான்.. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நம்மிடமும் கில்லிகள் இருக்கிறார்கள். அதை ஏன் ரசிகர்கள் பெரிதளவு விரும்ப மாட்டேங்குறார்கள் என்று தான் தெரியவில்லை. இதற்கு மிகப் பெரிய உதாரணம், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி வெளியிட்ட ஒரு வீடியோ தான்.
தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.
இது எப்பேற்பட்ட வெற்றித் தெரியுமா? சீன தைபேவை 5 - 0 என தோற்கடித்ததை நாம் நிச்சயம் கொண்டாடித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், சோகம் என்னவெனில், அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து
நேரில் பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தான். இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,
"ஐரோப்பிய கால்பந்து கிளப் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.
இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை" என்று தனது உருக்கமான கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
இதைவிட நமது இந்திய கால்பந்து அணிக்கு வேதனை என்னவாக இருக்க முடியும்?.
ஆனால், சோகத்திலும் ஒரு நல்ல செய்தியாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சுனில் சேத்ரியின் இந்த வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து, மக்களும் அனைத்து விதமான விளையாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால், சுனில் சேத்ரியின் வீடியோ மிகவும் வைரலானது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், கால்பந்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "கமான் இந்தியா... இனி எங்கு இந்திய அணி கால்பந்து ஆடினாலும் மைதானத்தை முழுவதும் நிரப்புவோம்" என்று கூற, ஒட்டுமொத்த தேசமும் தனது ஆதரவை சமூக தளங்களில் மூலம் சுனில் சேத்ரிக்கு அளித்துள்ளது. இதனால் நெகிழ்ந்து போன சுனில், 'எனது கருத்துக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்திய கால்பந்து தொடர்பாக நடந்த சம்பவம் இதுதான்... ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு சில சம்பவத்தை இங்கே பதிவிட விரும்புகிறோம்.
1951 – 1962 காலக்கட்டம் இந்திய கால்பந்து அணியின் மிகச் சிறந்த காலக்கட்டம் எனலாம். இந்திய கால்பந்து ஜாம்பவான் சையது அப்துல் ரஹீமின் தலைமையில் இந்திய அணி, ஆசியாவின் சிறந்த அணியாக விளங்கியது. 1951ல் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
1951ல் இருந்து 1955 வரை நடைபெற்ற Quadrangular தொடரை தொடர்ச்சியாக வென்றது இந்திய கால்பந்து அணி. 1956ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில், கால்பந்து போட்டிகளில் நான்காவது பிடித்தது இந்தியா. உலக அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில், இந்திய கலந்து கொண்டது இது இரண்டாவது முறையாகும். அதுவும் தொடரை நடத்திய ஆஸதிரேலியா அணியை முதல் போட்டியிலேயே 4-2 என்ற கோல் கணக்கில் ஓடவிட்டது இந்திய கால்பந்து அணி.
அதுமட்டுமின்றி, அப்போட்டியில் நெவில்லே என்ற இந்திய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்து, ஒலிம்பிக்சில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் ஆசிய வீரர் எனும் பெருமையை பெற்றார். அந்த ஒலிம்பிக் தொடரில், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக்சில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆசிய அணி எனும் பெருமையை பெற்று வரலாற்றை படைத்தது.
சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 – 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தியது என்றும் மறக்க முடியாத பசுமையான நிகழ்வுகளாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.