ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றியை ஐதராபாத் அணி சுவைத்தது.
11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஏழாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன் அணியும், சன்ரைசஸ் ஐதராபாத் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன் அணி கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் வீழ்ந்தார். அதன் பின்னர் ஆட வந்த யாருமே சோபிக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், மும்பையின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் (28 ரன்), பொல்லாட் (28ரன்) என கொஞ்சம் தாக்குப்பிடித்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், ஸ்டான்லேக் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான விருத்தமான் சஹா 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். கொஞ்சம் தாக்குப்பிடித்த ஷிகார் தவான் 45 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்க்கண்டே ஓவருக்கு ஒரு விக்கெட் என 4 விக்கெட்டை அள்ளினார். இதனால் ஒரு கட்டத்தில் ஐதராபாத் அணி தடுமாறியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பென் கட்டிங் வீசினார். முதல் பந்தை எதிர் கொண்ட தீபக் ஹூடா அதை சிக்ஸருக்குத் தூக்கினார். ஒய்ட் பந்து வீசியதால் ஒரு ரன் கிடைததது. ஒவ்வொரு ரன்னாக ஐதராபாத் வீரர்கள் ரன்களைச் சேர்த்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. பந்தை எதிர் கொண்ட ஸ்டான்லேக் அதை பவுண்டரியாக மாற்றினார். இதன் மூலம் ஐதராபாத் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 32 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.