Advertisment

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் இளம் வீரர் சேர்ப்பு.. மேலும் சுவாரசியமான விளையாட்டுச் செய்திகள்…

நான் எத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வேன் என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

author-image
WebDesk
New Update
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் இளம் வீரர் சேர்ப்பு.. மேலும் சுவாரசியமான விளையாட்டுச் செய்திகள்…

யு-19 உலகக் கோப்பை:

Advertisment

பாராட்டு மழையில் இந்திய அணியின் கேப்டன்

யு-19 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் யஷ் துல் சதம் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஆன்டிகுவாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களை குவித்தது இந்தியா.

இந்த ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் ஷேக் ரஷீதும் (94 ரன்கள்) கேப்டன் யஷ் துல்லும் (110 ரன்கள்) சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்த காரணமாக அமைந்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முக்கியமான ஆட்டத்தில் சதம் பதிவு செய்த யஷ் துல்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜோகோவிச்சின் கொரோனா பரிசோதனை சர்ச்சை:

செர்பியா சுகாதாரத் துறை விளக்கம்

செர்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள் சரியானதே என்று அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாமல் செர்பியாவுக்கு திரும்பிச் சென்றார் ஜோகோவிச்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வீரர்களை ஆஸி. ஓபனில் விளையாட ஆஸ்திரேலிய அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், சில ஊடகங்களில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், செர்பியா சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ஜோகோவிச் பல முறை கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை கிடைக்கப் பெற்ற சோதனை முடிவுகள் செல்லுபடியானதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 கிராண்ட்ஸ்லாம் போதாது: சொல்கிறார் சாம்பியன் நடால்

ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயினின் மல்லோர்கா நகரில் செய்தியாளர்களுக்கு நடால் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் எத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வேன் என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

எங்கள் மூவரில் (ஜோகோவிச், ஃபெடரர்) அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நான் வெல்ல வேண்டும் என்று நினைப்பேன். அது எனக்கு பிடிக்கும். ஆனால், இதை நான் ஆவேசத்துடன் கூறவில்லை.

உண்மையைக் கூற வேண்டுமானால் 21 கிராண்ட்ஸ்லாம் என்பது எனக்கு பத்தாது. காயத்தில் இருந்து நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. விளையாடும்போது வலியால் அவதிப்பட்டு வருகிறேன். ஆஸி. ஓபன் இறுதிப்போட்டி மறக்க முடியாதது என்றார் நடால்.

3 இந்திய வீரர்களுக்கு கொரோனாவால்

ஒரு நாள் தொடரில் இளம் வீரருக்கு வாய்ப்பு

ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், தவன் ஆகிய இந்திய அணியின் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்றொரு இளம் வீரர் மயங்க் அகர்வால் 18 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இத்தகவல் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, மே.இ.தீவுகள் இடையே வரும் 6-ஆம் தேதி குஜராத் மாநிலம்,

அகமதாபாதில் ஒரு நாள் தொடர் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் அகமதாபாத் சென்றனர். அங்கு அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நான் உண்மையில் ஆல்-ரவுண்டர்

-இந்திய கிரிக்கெட் வீரர் பெருமிதம்

நான் உண்மையில் ஆல்-ரவுண்டர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்குர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்  கூறியதாவது:

 நான் நன்றாக பேட்டிங் செய்வேன். ஆனால், ரஞ்சிக் கோப்பையில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இந்திய அணியின்  முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எனக்கு 7 அல்லது 8ஆவது ஆர்டரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கினார். என்னிடம் என்ன திறமை இருந்ததோ அதை நான் ஆட்டத்தில் கொண்டு வந்துவிடுவேன். எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்குமோ அப்போதெல்லாம் நான் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வேன். நான் உண்மையில் ஓர் ஆல்-ரவுண்டர் என்றார் அவர்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 50 ஓவர் மற்றும் 20 ஓவர் தொடரில் ஷர்துல் இடம்பிடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment