இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் வரலாறுச் சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பெற்றது.
இந்த தொடரில் வெறும் மூன்று போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்து, இந்திய அணியின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் அஜின்கியா ரஹானே. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகி இருந்த போது, மீதம் இருந்த இளம் வீரர்களை கொண்டு ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஹானே. அதோடு போட்டியின் போக்கையும், ஆடுகளத்தின் சூழலையும் கணித்து இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு பாலமாகவும் செயல்பட்டார். தற்போது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தயாராகி வருகின்றார். இந்த போட்டிகளில் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்ப உள்ளார். ரஹானே அணியின் துணைக் கேப்டனாக செயல் பட உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "நானும் கேப்டன் விராட் கோலியும் நல்ல நணபர்கள். அவர் இந்தியாவில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். நான் துணைக் கேப்டடனாக தொடர உள்ளேன். இந்திய அணிய போட்டிகளில் வெற்றி பெறுவதே எங்கள் இருவரின் நோக்கமாக இருக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் போட்டிகளில் கேப்டன் கோலி தலைமையிலான அணியில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று கூறினார்.
இந்திய அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்த ஆல்-அவுட் ஆகி இருந்தது. கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரலாற்றிலே இந்திய அணி இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்த இக்கட்டான சூழலில் தான் ரஹானே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.
'இந்த போட்டிக்கு பிறகு தன்னை உறுதியாகவும், தைரியமாகவும் அணியை வழிநடத்த வேண்டும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் நம்பிக்கை அளித்ததாக' ரஹானே கூறியுள்ளார்.
மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் சில சாதுரியமாக நகர்வுகளை மேற்கொண்ட ரஹானே இந்திய அணியை எழுச்சி பெற செய்தார். ஆனால் சிட்டினியில் நடந்த 3வது போட்டி மிகச் சவாலான ஒரு போட்டியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் தொடங்கி அங்கிருந்த பார்வையாளர்கள் வரை இந்திய அணியினரை கடுஞ்சொற்களால் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர். அதோடு முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் நிறத்தை குறிப்பிட்டுக் காட்டி நிறவெறி தாக்குதலில் ஈடுபட்டு இருந்தனர்.
இது குறித்து ரஹானேவிடம் கேட்டபோது,"தங்களுடைய சொந்த அணியை உற்சாகப்படுத்துவதற்காக எதிரணியை மோசமான மற்றும் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களை அப்படி திட்டிய பார்வையாளர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றினால் மட்டுமே, நாங்கள் விளையாடுவோம் என்று அங்கு இருந்த அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறினேன். அவர்களை வெளியேற்றிய பின்னரே ஆட்டத்தை தொடர்ந்தோம்" என்கிறார்.
இந்த தொடரில் விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர்கள் தங்கள் முழு திறனையும் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு உழைத்தார்கள். அந்த வீரர்களை பல கட்டங்களில் பயிற்றுவித்த தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் ராகுல் டிராவிட்டிற்கு இந்த நேர்காணலின் மூலம் ரஹானே தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.