ஹர்திக் பாண்ட்யா ஒரு திமிரான கெத்தான ஸ்டைலான அதிரடியான என்று பல 'யான' போட்டு எழுதுவதற்கு தகுதியான ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அது மிகையல்ல. அவரது ஹார்ட் ஹிட்களுக்கு இந்திய மைதானங்களை தாண்டியும் மதிப்பிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் தன்னை செதுக்கிக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து நிற்கிறார்.
ஆனால், களத்திற்கு வெளியே சில மோசமான சர்ச்சைகளையும் பாண்ட்யா சந்தித்து இருக்கிறார். குறிப்பாக, பெண்கள் குறித்து சக வீரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாக, அணியில் இருந்தே சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் பெஸ்ட் மேட்டான கீரன் பொல்லார்ட், பாண்ட்யாவை பெரிதும் பாராட்டி பேட்டி அளித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், "மும்பை அணிக்காக ஹர்திக் ஆடத் துவங்கியதில் இருந்து நான் அவரை பார்த்து வருகிறேன். இந்திய சூப்பர் ஸ்டாராக அவர் உருவெடுத்து இருப்பதை நான் ஆச்சர்யமாக பார்க்கவில்லை.
அவர் தன்னை தாங்கிச் செல்லும் விதமும், அவர் விளையாடு விதமும் அவர் களத்திற்கு வெளியே எப்படி செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது. இது போன்றவர்களை பார்க்கும் பொழுது, மிகவும் பழமைவாத நபர்களாகிய நாம் எப்போதும் எதிர்மறையான விஷயங்களையே சொல்ல முனைகிறோம்.
ஆனால், உங்களுக்கு தெரியுமா, நீங்கள் களத்திற்கு வெளியே நம்பிக்கையுள்ள நபராக இருக்கும்போது, அதை நீங்கள் களத்திற்குள்ளும் கடத்திச் சென்று சாதிக்க முடியும், அது மனிதனிலேயே இருக்கும் பெரும் திறனைக் காட்டுகிறது.
அவர் இவ்வளவு குறுகிய காலத்திலேயே நிறைய விஷயங்களை கடந்துவிட்டார், ஆனால் அவர் இங்கிருந்து மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். அவர் கடினமான உழைப்பை கொட்டுகிறார். இந்த தருணத்தில் அவர் அடைந்திருக்கும் இடத்தை நான் ஆச்சர்யமாகவே பார்க்கவில்லை" என்றார்.