சஸ்பென்ஷனுக்கு பிறகு 1000 பந்துகளை அடித்து விளாசிய ஹர்திக் பாண்ட்யா! மிரண்டு போன பயிற்சியாளர்!

அப்போது அவரது ஷாட்கள் ஒவ்வொன்றும் மிக பெர்ஃபக்டாக இருந்தது. இது எப்படி சாத்தியம்? என்று அவரிடம் கேட்டேன்

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் லோகேஷ் ராகுல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கினார்.

கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் விஷயங்களை ஓப்பனாக பேசப் போய் வாங்கிக் கட்டினார் ஹர்திக் பாண்ட்யா. இதனால், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து உடனடியாக நீக்கப்பட்ட இருவரையும், நியூசிலாந்து தொடரில் இருந்தும் நீக்கி தாயகம் திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது.

இதனால், வீட்டிற்குள்ளேயே இரு வீரர்களும் முடங்கினர். வெளியில் தலை காட்ட முடியாத சூழல் உருவானது. குறிப்பாக, சமூக தளங்களில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனால், எங்கேயும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தார் ஹர்திக்.

சர்ச்சைக்குரிய விதத்தில் ஹர்திக் பாண்ட்யா பேசியது என்ன? முழு விவரம்

இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் லோகேஷ் ராகுலின் தடை நீக்கப்பட்டு, ஹர்திக் உடனடியாக நியூசிலாந்து செல்ல பிசிசிஐ அறிவுறுத்தியது. இருப்பினும், அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆலோசகர் கிரண் மோரே அளித்த பேட்டியில், ‘பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிப் பெற வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட ஒரு அற்புதமான கிரிக்கெட்டர் ஹர்திக், மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

மேலும், ‘தடை விதிக்கப்பட்ட பின், சில நாட்கள் கிரிக்கெட் ஆடாமல் இருந்துவிட்டு, அவர் மீண்டும் பரோடா கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வந்தார். அப்போது அவரது ஷாட்கள் ஒவ்வொன்றும் மிக பெர்ஃபக்டாக இருந்தது. இது எப்படி சாத்தியம்? என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், “நான் ஆஸ்திரேலியாவில் இருந்த போது, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல் கிடைத்த பிறகு, 1000 பந்துகளை எதிர்கொண்டு அடித்தேன். அதுதான் காரணம்” என்றார்.

இத்தனை ஆண்டு காலமாக ஹர்திக் பாண்ட்யாவை நான் கவனித்து வருகிறேன். களத்தில் இதுவரை ஒருமுறை கூட அவர்மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்ததாக எனக்கு நினைவில்லை. ஹர்திக்கின் ஷாட்ஸ் எதுவுமே மிஸ் ஆகவில்லை. அவரது வழக்கமான டச் எல்லா பந்திலும் பார்க்க முடிந்தது. அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடப் போவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

நியூசிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணியில் விரைவில் இணைய உள்ள ஹர்திக் பாண்ட்யா, நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close