'ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது....'! - அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற ஜோகோவிச் சொன்ன கதை!

என்னை உருப்படியாக்கியதும் அவர்கள் தான். இதற்காக நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்

அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அமெரிக்க ஓப்பன் டென்னிசில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 3-வது இடத்தை பீட் சாம்ப்ராஸ் உடன் பகிர்ந்துகொண்டார் ஜோகோவிச். அதுமட்டுமின்றி, தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு ஜோகோவிச் முன்னேறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோகோவிச், “உண்மையில் நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஃபெடரர், நடால் ஆகிய போட்டியாளர்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர். என்னை உருப்படியாக்கியதும் அவர்கள் தான். இதற்காக நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். பீட் சாம்ப்ராஸின் சாதனையை நான் சமன் செய்திருக்கிறேன். அவர் மிகப்பெரிய லெஜண்ட். எனது பள்ளிப்பருவ ஹீரோ. அவரைப் போன்று வர வேண்டும் என விரும்பினேன். முதன் முதலில் எங்கள் வீட்டின் தொலைக்காட்சியில் பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டன் பட்டம் வென்றதை நான் பார்த்தேன். அது அவரின் முதல் விம்பிள்டன் பட்டமா அல்லது இரண்டாவதா என தெரியவில்லை. ஆனால், அந்த நொடி தான் என்னை டென்னிஸ் வீரனாக வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. இன்று இங்கு நிற்கிறேன்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close