இத்தாலி நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்னாநந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். இவரின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள செஸ் பிளேயர்ஸ், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் சக நண்பர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Chess Champion Pragnananda - செஸ் சாம்பியன் பிரக்னாநந்தா
இந்நிலையில், இத்தாலி நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பினார் பிரக்னாநந்தா. இன்று மதியம் 1 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த சிறுவன் பிரக்னாநந்தா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
“இப்போ இத்தாலி செஸ் டோர்னமெண்ட் போட்டிக்கு போயிருந்தேன். அங்கு கிராண்ட் மேஸ்டர் லெவல் விளையாடி டைடில் ஜெயித்தது பெருமையா இருக்கு. இந்த செஸ் போட்டியில் கலந்துக்கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு பிறகு ரேடிங்க் அதிகரிக்கனும், அடுத்ததா சூப்பர் கிராண்ட் மாஸ்டர் ஆகனும்.” என்றார்.
பின்பு, விஸ்வநாத் ஆனந்த் அவர்களின் வாழ்த்து குறித்தும், அவருடன் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எப்படி உணர்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறிதும் யோசிக்காமல், “விஸ்வநாத் ஆனந்த் சார் கூட விளையாடுவது பெரிய விஷயம். அப்படி ஒரு சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
பிரக்னாநந்தா குறித்த பிற செய்தி : நெதர்லாந்து செஸ் பிளேயருக்கு செக் மேட் வைத்த சென்னை கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தா!
மேலும், உலக நம்பர் ஒன் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், விஸ்வநாத் ஆனந்த் போன்றவர்கள் போல் சாதனைப் படைக்க வேண்டும் என்றார் பிரக்னாநந்தா. இவரின் இந்திய வருகைக்கு அவரின் உறவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தன. சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த உடனே பிரக்னாநந்தாவை பெரும் உற்சாகத்துடன் அனைவரும் வரவேற்றனர்.