ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட்டை ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி கைப்பற்ற வேண்டும் என்றும், அவருக்கு எப்படி பந்து போட்டால் அவர் எப்படி அவுட் ஆகுவார் என்கிற நுணுக்கங்களையும் வழங்கியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி.
கோலி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 54.08 சராசரியுடன் ரெட் பால் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.இருப்பினும், கோலியின் சமீபத்திய ஃபார்மில் உள்ள சரிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவருக்கு 'பாடி பேஷ்' பவுலிங் போட வேண்டும், அதாவது, கோலி உடம்பில் அதிரடியான வேகத்தில் பந்து வீசி தாக்கும்படி பவுலிங் போட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை இயன் ஹீலி வலியுறுத்தியுள்ளார்.
கோலி கடைசியாக விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 22.72 மட்டுமே இருக்கும் சூழலில், முன்னோக்கி டிஃபென்ஸ் ஆட வரும் அவரை எல்.பி.டபிள்யூ-வில் சிக்க வைக்கும் நோக்கில் நேரான தாக்க பந்துகளை கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இயன் ஹீலி பேசுகையில், "எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் விராட் கோலிக்கு எப்படி பந்து வீசுவார்கள் என்பதுதான் நான் பார்க்கும் முதல் மேட்ச்அப். அவர்கள் அவருடைய கால் பகுதிகளை அதிகமாக டார்கெட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவர் மைதானத்தின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் பந்தை அடிக்கலாம். ஆனால் தற்போது அவர் சுமாரான பார்மில் இருப்பதை பயன்படுத்தி நீங்கள் அவருடைய கால்களை டார்கெட் செய்து விக்கெட்டை எடுக்க பார்க்க வேண்டும்.
ஆனால் அதை ஒவ்வொரு பந்திலும் செய்யாதீர்கள். ஏனெனில் அதை விராட் கோலி சரியாக கனித்து ரன்கள் குவிப்பார். ஒருவேளை அந்தத் திட்டம் வேலையாகவில்லை எனில் உடம்பில் தாக்குங்கள். குறிப்பாக வலது கை பேட்ஸ்மேனான அவருடைய தோள்பட்டையின் பின்பகுதியில் வலது கை பவுலர்கள் தாக்க வேண்டும். அதன் காரணமாக குனிந்து நிமிர்ந்து எப்படியாவது அந்த பந்துகளை எதிர்கொள்ள முயற்சிப்பார்.
அது போன்ற சூழ்நிலையில் லெக் சைடு திசையில் அவருக்கு ஷார்ட் லெக் பீல்டரை நிறுத்தி அதிரடியான பவுன்சர் பந்துகளை வீசுங்கள். அதை எதிர்கொள்ள அவர் ஹுக் அல்லது புல் ஷாட்டை அடிக்க முயற்சிப்பார். ஆனாலும் உயரம் காரணமாக அதை கட்டுப்படுத்தி சரியாக எதிர்கொள்வது கடினமாக இருக்கும். எனவே அவருடைய உடலை தாக்குவது இரண்டாவது திட்டமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.