9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ICC Champions Trophy 2025: India vs Pakistan on February 23, see full fixture list
இந்த தொடருக்கான தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்தை சந்திக்கிறது. இப்போட்டியானது பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்த சூழலில், இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இவ்விரு அணிகளும் கடைசியாக 2024 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் மோதின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஒருநாள் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மோதின. இதில் பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பிப்ரவரி 20 அன்று வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முழு அட்டவணை பின்வருமாறு:-
பிப்ரவரி 19: பாகிஸ்தான் - நியூசிலாந்து (கராச்சி)
பிப்ரவரி 20: வங்காளதேசம் - இந்தியா (துபாய்)
பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (கராச்சி)
பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 23: பாகிஸ்தான் - இந்தியா (துபாய்)
பிப்ரவரி 24: வங்காளதேசம் - நியூசிலாந்து (ராவல்பிண்டி)
பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)
பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 27: பாகிஸ்தான் - வங்காளதேசம் (ராவல்பிண்டி)
பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (லாகூர்)
மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (கராச்சி)
மார்ச் 2: நியூசிலாந்து - இந்தியா (துபாய்)
மார்ச் 4: அரையிறுதி 1 (துபாய்)
மார்ச் 5: அரையிறுதி 2 (லாகூர்)
மார்ச் 9: இறுதிப்போட்டி (இந்தியா தகுதி பெறுவதை பொறுத்து)
மார்ச் 10: ரிசர்வ் டே.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வராவிட்டால் இறுதிப்போட்டி பாகிஸ்தானிலேயே நடைபெறும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.