9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்ற தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் முன்னதாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது, இந்திய
அணி வீரர்கள் அணியும் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' (போட்டி நடத்தும் நாட்டின் பெயர்) என அச்சிடப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
இதையறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பி.சி.பி) அதிகாரிகள் கடும் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்துள்ளனர். மேலும், இந்திய அணி ஜெர்சியில் 'பாகிஸ்தான்' என்று அச்சிட மறுத்து கிரிக்கெட்டை அரசியல் ஆக்குவதாக பி.சி.சி.ஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடக்க விழாவிற்கு கேப்டன்கள் சந்திப்பிற்காக கேப்டன் ரோகி த் சர்மாவை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய வாரியம் மறுத்ததாக கூறப்படுகிறது.
"பி.சி.சி.ஐ கிரிக்கெட்டில் அரசியலை கொண்டு வருகிறது. இது விளையாட்டிற்கு நல்லதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டனர். அவர்கள் தங்கள் கேப்டனை (பாகிஸ்தான்) தொடக்க விழாவிற்கு அனுப்ப விரும்பவில்லை, இப்போது அவர்கள் போட்டியை நடத்தும் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை அவர்களின் ஜெர்சியில் அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இதை நடக்க அனுமதிக்காது, பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காது என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று பெயர் குறிப்ப்பிட விரும்பாத பி.சி.பி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.