ICC Champions Trophy guide: 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நாளை புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக ஏழு அணிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளன. அதே நேரத்தில் இந்தியா தங்கள் போட்டிகளை துபாயில் விளையாடுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ICC Champions Trophy ultimate guide: Everything you need to know about mega event
இந்நிலையில், புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் தொடருக்கு முன்னதாக, ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபிக்கான வழிகாட்டியை இங்கு வழங்கியுள்ளோம். அதில், இந்தத் தொடரில் எந்தெந்த அணிகள் விளையாடுகின்றன, இந்தியா எப்போது விளையாடும், எப்படி எட்டு அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றன மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான இடம் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதை விளக்கியுள்ளோம்.
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் எத்தனை அணிகள் விளையாடுகின்றன?
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப் ஏ-விலும், மீதமுள்ள நான்கு அணிகளான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்தியாவின் அட்டவணை:
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவின் போட்டி அட்டவணை இதோ:
பிப்ரவரி 20: இந்தியா vs வங்கதேசம்
பிப்ரவரி 23: இந்தியா vs பாகிஸ்தான்
மார்ச் 2: இந்தியா vs நியூசிலாந்து
பிற முக்கிய தேதிகள்
பிப்ரவரி 19 அன்று கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2017ல் இருந்து ரன்னர்-அப் மற்றும் இரண்டு முறை வெற்றி பெற்ற இந்தியா, பிப்ரவரி 20 அன்று வங்கதேசத்திற்கு எதிராக துபாயில் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கிறது. நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா, பிப்ரவரி 22 சனிக்கிழமை தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இரண்டு அரையிறுதிப் போட்டிகள் முறையே துபாய் மற்றும் லாகூரில் மார்ச் 4 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
8 அணிகள் எப்படி தேர்வு செய்யப்பட்டன?
முன்னதாக ஒருநாள் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெறும். அந்த வகையில், ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் 10 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகள், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் உட்பட, சாம்பியன்ஸ் டிராபிக்கான இடத்தைப் பிடித்தன.
போட்டி வடிவம்
2006 முதல் எட்டு அணிகளும் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோத வேண்டும். பின்னர், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல்-இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான இடம் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை?
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெறும் இடம் குறித்த நிச்சயமற்ற நிலை இந்திய அணியால் நிலவுகிறது. கிரிக்கெட் போட்டிகளுக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியர்கள் மறுத்துவிட்டனர். எனவே அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், ஆட்டம் துபாயில் விளையாடப்படும், அங்கு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் உட்பட அனைத்து குரூப் ஏ ஆட்டங்களையும் விளையாடுகிறது. இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றால், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும்.
பரிசுத் தொகை
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.19.45 கோடி பரிசுத்தொகையும்,
2-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 9.72 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ. 4.86 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 2017 தொடரில் இருந்து மொத்த பரிசுத் தொகை சுமார் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐ.சி.சி அறிவித்துள்ள மொத்த பரிசுத்தொகை ரூ 59.9 கோடி (6.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரலை ஒளிபரப்பு
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நேரடி ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டாரில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும்.