சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
மறுபுறம், 'பி' பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜத்ரான் ஜோடி களமாடினர். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
களத்தில் இருந்த தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் 2 பவுண்டரியை விரட்டி 22 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி 177 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். இவர் ஆட்டமிழந்தது ஆப்கான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இதன்பிறகு ஜோடி அமைத்த செடிகுல்லா அடல் - ரஹ்மத் ஷா ஜோடி, நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தனர். இதில் ரஹ்மத் ஷா 12 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் விளாசி 95 பந்துகளில், 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்த செடிகுல்லா அடல் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின் வந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (20 ரன்), முகமது நபி (1 ரன்), குல்பாடின் நைப் (4 ரன்), ரஷீத் கான் (19 ரன்) உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்மத்துல்லா உமர்சாய் அரைசதம் அடித்தார். அவர் 63 பந்துகளில், 1 பவுண்டரி, 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் பென் ட்வார்ஷூயிஸ் 3 விக்கெட்டையும், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டையும், க்ளென் மேக்ஸ்வெல், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா பேட்டிங்
தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முற்பட்ட நிலையில், மேத்யூ ஷாட் 15 பந்துகளில், 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி ரன்களை குவித்த நிலையில், டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார். அணியின் ஸ்கோர் 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 59 ரன்களும், ஸ்மித் 22 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதனிடையே, லாகூரில் கனமழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்ட நிலையில், 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா அணி, ஏ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆப்கான் - தென் ஆப்ரிக்கா: யாருக்கு வாய்ப்பு?
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளுடன் இருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு மீதம் ஒரு போட்டி உள்ளது. இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அந்த அணி மிகப்பெரிய நெட் ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடைந்தால் மட்டுமே ஆப்கான் அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால், அந்த வாய்ப்பு மிகவும் அரிது என்பதால் தென் ஆப்பிரிக்கா அணியே அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.