ICC Cricket World Cup Tamil News: 10 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஜிம்பாப்வேயில் நடந்து வரும் தகுதி சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எஞ்சிய 2 அணிகளாக உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும்.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டது. இதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்திய அணியின் முதல் ஆட்டம், அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
மைதானங்கள் புதுப்பிப்பு ஜரூர்
இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது. இதனையடுத்து, மைதானங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மும்பையில் புதிய ஃப்ளட்லைட்கள் மற்றும் கார்ப்பரேட் பெட்டிகள், லக்னோவில் ரிலேட் ஆடுகளம், கொல்கத்தாவில் மேம்படுத்தப்பட்ட ட்ரெஸ்ஸிங் ரூம், தரம்சாலாவில் இறக்குமதி செய்யப்பட்ட அவுட்பீல்ட், புனேவில் புதிய தற்காலிக கூரை, டெல்லியில் மேம்படுத்தப்பட்ட டிக்கெட் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், சென்னையில் புதிய லெட் விளக்குகள் மற்றும் 2 சிவப்பு மண் ஆடுகளங்கள் என மைதானங்கள் புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
உலகக் கோப்பை போட்டிகள் கிரிக்கெட் திருவிழா போல் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு மைதானத்திற்கும் ஒவ்வொரு தேவைகள் உள்ளன. இதன்படி, 4 லீக் ஆட்டங்கள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியை நடத்தத் தயாராக உள்ள மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில், அதன் அவுட்ஃபீல்ட், புதிய எல்.இ.டி விளக்குகள் மேம்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் பெட்டிகள் மற்றும் கழிப்பறைகளைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிய எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு, இரண்டு சிவப்பு மண் பிட்ச்கள் பொருத்துவதற்காக சதுர குழி தோண்டப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியின் போது அதிகம் பேசப்பட்ட லக்னோ மைதானம் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்தை நடத்தும் நிலையில், அதன் பிட்ச்களை ரிலே செய்கிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இருக்கைகள் மற்றும் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) ஸ்டேடியத்தில் ஏற்கனவே விரிவான பணிகள் செய்யப்பட்டுள்ளன. புனரமைப்பு பணிகள் முடிவடையாததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒதுக்கப்பட்ட டெஸ்டை இந்த மைதானத்தில் நடத்த முடியவில்லை. ஆனால் இப்போது நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் போட்டி உட்பட 5 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தயாராக உள்ளது.
6,000 மீட்டர் சிறப்புக் குழாய்களைக் கொண்ட புதிய வடிகால் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அதிக மழைநீரை விரைவாக வெளியேற்றக்கூடிய காற்று வெளியேற்றும் அமைப்பு, குளிர்ந்த காலநிலைக்கு மிகவும் பொருத்தமானதாகக் கூறப்படும் ரைகிராஸ் மற்றும் ஆற்று மணல் மற்றும் சரளை ஆகியவை ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன. ஸ்காட்லாந்து அவுட்ஃபீல்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரைகிராஸ் முதலில் குளிர்காலத்தில் 3 முதல் 15 டிகிரி வெப்பநிலையில் விதைக்கப்பட்டு, நிழலை எதிர்க்கும் பாஸ்பாலம் புல்லில் கலக்கப்பட்டுள்ளது என்று ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு உலகக் கோப்பை மைதானமும் பெரிய போட்டிகளுக்கு முன்னதாக அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 500 கோடி ரூபாய்க்கு மேல் 10 உலகக் கோப்பை மைதானங்களுக்கு வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil