ICC Cricket World Cup Qualifiers 2023 Tamil News: இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ நகரில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டும். சூப்பர் சிக்ஸ் சுற்றில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.
எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?
உலக கோப்பைக்கு தகுதி சுற்று போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள ஜிம்பாப்வே அணி இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் (நேபாளம், நெதர்லாந்து) வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், அந்த போட்டியில் அமெரிக்கா அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
2 போட்டிகளில் விளையாடியுள்ள நேபாளம் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி பெற்று 4வது இடத்தில் உள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நெதர்லாந்து தோல்வியுற்று வெற்றிக்கணக்கை தொடங்காமல் உள்ளது.
'பி' பிரிவை பொறுத்தவரையில், ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2 புள்ளிகள் மற்றும் வலுவான நெட்ரன்ரேட்டுடன் (+3.500) முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஓமன் அணி 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.