வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடுவதை தவறவிடும் சூழலில் சிக்கியுள்ளது.
ICC Cricket World Cup Qualifiers 2023 - Super Six Stage starts Tamil News: ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டது. அதன்படி, இந்திய மண்ணில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணியின் முதல் ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Advertisment
அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மொத்தமாக இந்திய அணி 9 லீக் போட்டிகளில் களமிறங்க உள்ளது.
தகுதிச் சுற்று போட்டிகள்
இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த தகுதி சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் நிலையில், அதில் 10 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
Advertisment
Advertisements
‘சூப்பர் 6’ சுற்று
இந்நிலையில், லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் ‘சூப்பர் 6’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக, லீக் சுற்றில் ஜிம்பாப்வே 4 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 8 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. நெதர்லாந்து 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளும், 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளும் பெற்றிருந்தன.
அதேநேரத்தில், ‘பி’ பிரிவில் இலங்கை 4 ஆட்டங்களிலும் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் பெற்று 8 புள்ளிகளை பெற்றிருந்தது. ஸ்காட்லாந்து 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளும், ஓமன் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளும் பெற்று இருந்தது. லீக் சுற்றில் ஒரே பிரிவில் இருந்து முன்னேறிய அணிக்கு எதிராக வென்ற அனைத்து புள்ளிகளும் சூப்பர் 6 சுற்றில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அவ்வகையில் இலங்கை அணியானது ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் வெற்றி பெற்றிருந்ததால் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதேபோன்று ஜிம்பாப்வே நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகளை வென்றிருந்ததால் 4 புள்ளிகளுடன் சூப்பர் 6 சுற்றை சந்திக்கிறது.
இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்திடம் தோல்வி அடைந்ததால் புள்ளிகள் ஏதும் இன்றி களமிறங்குகிறது. இதே நிலைமைதான் ஓமன் அணிக்கும் ஏற்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மோதாத அணிகளுடன் விளையாடும். இந்த வகையில் ஒரு அணி 3 ஆட்டங்களில் மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில்முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
— ICC Cricket World Cup (@cricketworldcup) June 28, 2023
சூப்பர் 6 சுற்று போட்டிகள்
சூப்பர் 6 சுற்றின் தொடக்க ஆட்டம் புலவாயோ நகரில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றன. நாளை (30-ம் தேதி) நடைபெறும் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து,
ஜூலை 1-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து, ஜூலை 2-ம் தேதி ஜிம்பாப்வே - இலங்கை, ஜூலை 3-ம் தேதி நெதர்லாந்து - ஓமன், ஜூலை 4-ம் தேதி ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, ஜூலை 5-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் - ஓமன், ஜூலை 6-ம் தேதி ஸ்காட்லாந்து - நெதர்லாந்து, ஜூலை 7-ம் தேதி இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் நுழைந்துள்ள நிலையில், இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேவேளையில், வெஸ்ட் இண்டீஸ் புள்ளிகள் ஏதுமின்றி உள்ளது. இதனால் அந்த அணி ஸ்காட்லாந்து, ஓமன், இலங்கை ஆகிய 3 அணிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி அதிகபட்சமாக 6 புள்ளிகளையே எட்டும். மறுபுறம், ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் தலா 2 வெற்றிகளை பதிவு செய்தாலே எளிதாக உலகக் கோப்பைக்கு முன்னேறி விடும். இந்த நிலை உருவானால் இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடுவதை தவறவிடும் நிலை ஏற்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil