இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கி பெர்த் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் தற்காலிக கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், தொடரில் இந்தியா 1 - 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
பெர்த் வெற்றியைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்தியா 61.11 சதவீதம் புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய (57.69 சதவீதம்) 2வது இடத்துக்குப் பினுக்குத் தள்ளி முதலித்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை (55.56 சதவீதம்), நியூசிலாந்து (54.55 சதவீதம்) அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. அதன் படி, ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.
பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்களுக்கு 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்சில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் பும்ரா. அவர் 883 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இருப்பதால், முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 2வது இடத்திற்கும், 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அஸ்வின் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.சி.சி தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அதிகபட்சமாக 883 புள்ளிகளை பெறுவது இதுவே முதல்முறையாகும். முன்பு, இந்திய பந்துவீச்சாளர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் (904), ரவீந்திர ஜடேஜா (899) மட்டுமே அதிக புள்ளிகள் பெற்றுள்ளனர். அதேநேரத்தில், பும்ரா இந்த ஆண்டு தரவரிசையில் முதலிடம் பெறுவது இது மூன்றாவது முறையாகும். பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கி ஒவ்வொன்றும் இரண்டு ஒரு மாத நீட்டிப்புகளுக்கு அவர் முதலிடத்தில் இருந்தார்.
2-வது இடத்தில் ஜெய்ஸ்வால்; மீண்டும் முதல் 15 இடத்துக்கு முன்னேறிய கோலி
ஆஸ்திரேலியாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை பதிவு செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பாக நிலையில் உள்ளார். அவர் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளர். பெர்த்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களுடன் அதிகபட்சமாக ஹாரி புரூக் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை ஜெய்ஸ்வால் விஞ்சினார். இந்தப் பட்டியலில் 903 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரிஷப் பண்ட் 6வது இடத்தில் தொடர்ந்து வருகிறார்.
இதற்கிடையில், 10 ஆண்டுகளில் முதல் முறையாக டாப் 20 இடங்களில் இருந்து சரிவைக் கண்ட நட்சத்திர இந்திய பேட்டர் விராட் கோலி, தற்போது முதல் 15 இடங்களுக்கு திரும்பினார். 143 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்த கோலி 22 ஆம் இடத்தில் இருந்து 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கு முன்னேறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“