சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசை இன்று வெளியானது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ராவும் முதலிடத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தரவரிசை இன்று வெளியாகியுள்ளது.
இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். 2-வது இடத்தில் 871 புள்ளிகளுடன் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். 3வது இடத்தில் 808 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் உள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தரநிலை இதுவேயாகும். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 5-வது இடத்திலும் உள்ளனர். 767 புள்ளிகளுடன் ஷிகர் தவான் 7-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், 3-ம் இடத்தில் 723 புள்ளிகளுடன் இந்திய வீரர் குல்தீப் யாதவ் உள்ளார்.
அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா 702 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் யுவேந்திர சாஹல் 683 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 121 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.